எடப்பாடி சொன்ன பிரம்மாண்ட கட்சி.. விஜயின் தவெக? அப்போ பாஜகவிற்கு கல்தா? தொடங்கிய பேச்சுவார்த்தை?
சென்னை: அதிமுக கூட்டணியில் பிரம்மாண்டமான கட்சி இணைய போவதாக எடப்பாடி பழனிசாமி கூறியது மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜய் குறிப்பிடும் அந்த பிரம்மாண்டமான கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி பற்ற வைத்த நெருப்பு ஒன்று தமிழக அரசியலில் தீயாக பரவி வருகிறது. ஒரு பிரம்மாண்டமான கட்சி தங்களுடன் இணைய போவதாக எடப்பாடி பழனிசாமி கூறியது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சி எது என்ற கேள்வி தமிழக அரசியலில் தீவிரமாக நிலவி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக வெற்றிக் கழகமா?
சமீபத்தில் விஜய் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கொள்கை எதிரியான பா.ஜ.க-வுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்றைக்கும் கூட்டணி கிடையாது; தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதை ஏற்க முடியாது
சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க-வுடன் கூடிக் குலைந்து கூட்டணி வைக்க த.வெ.க ஒன்றும் தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இல்லை. தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும்
பாஜகவிற்கு எதிரானதாகதான் இருக்கும். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது, கீழடி விவகாரத்தில் தமிழர்களின் உண்மையை மறைக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தவெக கூட்டணி எப்போதும் திமுக, பாஜகவுக்கு எதிராகவே இருக்கும்; பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது, என்று த.வெ.க தலைவர் விஜய் பேசி உள்ளார்.
அதிமுக என்ற வார்த்தையே இல்லை
இதில் ஒரு இடத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையே இல்லை. இதனால் அதிமுக - விஜய் கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி இருந்தன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்ததாக. ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சி கள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாதும் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்.
பாஜகவிற்கு நோ
ஆனால் இப்போது பாஜகவிற்கு விஜய் நோ சொல்லி உள்ளார். எனவே பாஜக லிஸ்டில் இல்லை. இதனால் ஒருவேளை பாஜக இல்லாத.. அதிமுக - விஜய் என்ற புதிய கூட்டணி உருவாகுமோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்தது, முருகர் மாநாடு என்று பல விஷயங்களில் பாஜக - அதிமுக இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் அதிமுக பாஜக கூட்டணியை உடைத்து தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைத்தாலும் வியப்பில்லை. ஆனால் இங்குதான் வேறு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதே சமயம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள முடிவு அதிமுகவிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி போடும் இந்த புதிர் காரணமாக எடப்பாடி பழனிசாமி - விஜய் கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications