பாஜக என்னை இயக்குகிறதா? தலித் பொதுத்தொகுதி கேட்கக்கூடாதா? ஆ.ராசாவுக்கு ஆதவ் பதிலடி?
சென்னை: தான் பேசிய கருத்துகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அதில் ஒரு தவறும் இருப்பதாகத் தான் கருதவில்லை என்றும் விசிக து. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் அளித்த பேட்டி ஒன்று இப்போது தமிழக அரசியலில் வெப்பத்தை அதிகரித்துள்ளது. '4 ஆண்டுகள் முன்னால் சினிமாவில் நடிகராக இருந்தவர் துணை முதல்வராகும் போது 40 ஆண்டுகளாக அரசியல் களத்தில் உள்ள திருமாவளவன் அந்தப் பதவிக்கு வரக்கூடாதா?’ என்று கேள்வி எழுப்பி இருந்ததுதான் இப்போது சர்ச்சைக்குக் காரணமாகி இருக்கிறது.

இந்தப் பேட்டி தொடர்பாக ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஆதவ் அர்ஜுன் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஆதவ்க்கு பின்னால் பாஜக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், 'திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் விசிக உதவியது என்பது உண்மை. அதேபோல் விசிகவுக்கு 2 எம்பிகள், 4 எம்.எல்.ஏக்கள் திமுகவுடனான கூட்டணியால்தான் கிடைத்துள்ளது. எனவே ஆதவ் அர்ஜுன் கருத்து அரசியல் முதிர்ச்சி அற்றது’ என்று கூறியுள்ளார். வன்னி அரசு, 'அது கட்சியின் கருத்தல்ல. அவரது சொந்த கருத்து’ எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது கருத்துகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. தான் பேசியதில் எந்தவித தவறும் இல்லை என்று ஆதவ் அர்ஜுன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விரிவாக விளக்கி இருக்கிறார். ஆதவ் பேசும் போது, “அவர் கருத்திலிருந்து நான் விலகவில்லை. உடன்படுகிறேன். என் கருத்து என்னவென்றால், ஒரு கூட்டணியை உருவாக்குகிறோம். அது ஆட்சிக்கு வந்ததும் வெற்றிக்கு முழுக் காரணம் நாங்கள்தான் என சொல்வது தவறானது என்றே நான் பேசி இருக்கிறேன். ஊடகத்தினர் என்னிடம் 2% வாக்குகள்தானே விசிகவுக்கு உள்ளது எனக் கேட்டதற்கு நான் விளக்கம் அளித்தேன்.
விசிக 6 தொகுதிகளில் நின்றதால் புள்ளி 99% வாங்கி இருக்கிறோம். ஆனால், 60 தொகுதிகளில் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் விசிகவுக்கு விழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் வாக்குகள் விசிகவுக்கு உள்ளது. அதைத் தேர்தல் களத்தில் நான் எடுத்த டேட்டாவை வைத்து விளக்கிப் பேசி இருந்தேன். எனவே புள்ளி 99% எனச் சொல்லி விசிகவை சுருக்கவேண்டாம் என்றேன். அதுதான் என் வாதம்.
ஜனநாயகத்தை, சமூகநீதியைப் பேசும் திமுகவில் உள்ள ஆ.ராசா ஏன் இதற்கு மறுப்பு தெரிவித்தார் எனப் புரியவில்லை. சந்திரபாபு நாயுடு கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. எனவே அவர் பவன் கல்யாண் உட்பட சில கட்சிகளைக் கூட்டணிக்குள் சேர்க்கிறார். அது வெற்றி பெற்றவுடன் 11 சீட்டுகளை வென்ற பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கிறார். அந்தப் பெருந்தன்மை நாயுடு கடைப்பிடித்தார். இந்தச் சிந்தனை தமிழ்நாட்டிலும் வரவேண்டும் என நான் கருதுகிறேன்.
திமுக 117 சட்டமன்ற உறுப்பினர்களைவைத்துள்ளது. அதற்கு பெரும்பான்மை உள்ளது. நான் இன்றே விசிகவுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள் எனச் சொல்லவில்லை. விசிகவின் எதிர்கால கொள்கையாக அதைச் சொல்கிறேன். இங்கே ஒரு கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால் 45% க்கு மேல் வாக்குகளைப் பெற வேண்டும். அந்தளவுக்குப் பலம் அதிமுக, திமுக உட்பட எந்தக் கட்சிக்கும் கிடையாது. எனவே கூட்டணி தேவையாகிறது. அதில் விசிகவை மட்டும் தனியாக ஏன் போட்டியிடவில்லை என்று கேட்கக் கூடாது.
ஆ.ராசாவை நான் நன்கு அறிவேன். அவர் என்னை நன்கு அறிவார். என் பின்னால் பாஜக இருப்பதாக அவர் எப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை. என்னை மத்திய அரசு டார்கெட் செய்தபோது நான் அஞ்சாமல் என் வேலையைச் செய்திருக்கிறேன். எங்கள் கட்சியில் உள்ள ரவிக்குமார் 2014இல் கூட்டணி ஆட்சி பற்றி ஒரு நூல் எழுதி இருக்கிறார். அதை நான் படித்திருக்கிறேன். விசிகவில் இரண்டு அமைச்சர்கள் உருவானால் பாஜகவை ஆதரிக்கப் போகிறார்களா? விசிகவைவிட பாஜகவைக் கடுமையாக எதிர்க்கும் இயக்கம் வேறு என்ன உள்ளது?
திமுக ஆட்சியில் மதுரையில் எங்களால் மதுரையில் கொடி ஏற்ற முடியவில்லை. அதேபோல கவுரவக் கொலைக்கு எதிராகச் சட்டம் இயற்றச் சொல்கிறோம். அது நடக்கவில்லை ஏன்? இங்கே ஜாவாஹிருல்லா கோவைக் குண்டு வெடிப்பில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சங்கங்கள் பேருந்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பிரச்சினை குறித்துப் போராடி வருகிறார்கள். விசிக வேங்கை வயல் பற்றி கேள்வி எழுப்புகிறது. ஆக, திமுக சமூகநீதி கொள்கையில் உறுதியாக இருக்கிறது உண்மைதான். அப்படி எனில் அது அரசாக அமையும் போது கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்காகக் குறைந்த பட்ச செயல்திட்டம் வேண்டும் என்கிறோம். அதில் என்ன தவறு?
நான் மாமன்னன் படத்தில் உள்ள கருத்தைத்தான் உதாரணம் காட்டினேன். அதில் நடித்த உதயநிதி பற்றி எதையும் சொல்லவில்லை. ஒரு தலித் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து சமமாக நாற்காலியில் உட்காரக்கூடாது என்ற மனோபாவம் இருக்கிறது இல்லையா? அதற்குப் படத்தைப் பற்றி சுட்டிக்காட்டினேன். அதை நீங்கள் தனிப்பட்ட ஒருவரோடு சேர்த்துப் பார்க்கக்கூடாது. சமூகநீதி பற்றி ராசா அண்ணன் பேசுகிறார்.
அப்படி என்றால், சமூகநீதி கொள்கை உடைய திமுக ஏன் பெரம்பலூர் தொகுதியில் ராசாவை நிறுத்தாமல் நீலகிரிக்கு அனுப்பி வைக்கிறது. விசிக ஒரு பொதுத் தொகுதியைக் கேட்டால் ஏன் தர மறுக்கிறது? விசிக ஒரு பொதுத் தொகுதியில் நிற்கக்கூடாதா? ஜெயலலிதா திருச்சியில் தலித் எழில்மலையை நிறுத்தி வெற்றி பெறவைத்தாரே? அதை ஏன் நாம் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது?” என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications