முதல்வர் வேட்பாளர் சீமான் + 80 சீட்டு.. டெல்லியில் காய் நகர்த்திய பாஜக "தலை".. அப்போ அதிமுக கூட்டணி?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கம் உருவாகி வரும் நிலையில்.. இன்னொரு பக்கம் பாஜக - நாம் தமிழர் கூட்டணியை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. சமீபத்தில் நடந்த அமித் ஷா-எடப்பாடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு இரு தரப்பிலும் சுமுகமாகவும் சீரியசாகவும் நடந்துள்ளன. எடப்பாடியின் நடவடிக்கையில் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் அமித் ஷா, இந்த முறை இயல்பாக இருந்துள்ளார்.

சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் தொடர்பாகவே இருந்தது. பேச்சுவார்த்தையில் எடப்பாடி பேசியதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து அமித் ஷாவுக்கு தம்பிதுரை விளக்கினார். கூட்டணி குறித்து பேச்சு எழுந்தபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைத்துக் கொள்ளும் விவகாரம் வந்தது. திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமானால் அதிமுக பிளவு இல்லாமல் இருப்பது அவசியம் தானே! ஓபிஎஸ், சசிகலா, தினகரனை சேர்த்துக் கொள்வதில் என்ன சிக்கல்? என்று அமித் ஷா கேட்டுள்ளார்.
கூட்டணி இடங்கள்
அதற்கு எடப்பாடி, "பாஜகவுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு சம்மதம். ஆனால், அவர்களைச் சேர்த்துக் கொள்ளமட்டும் வலியுறுத்தாதீர்கள். மீண்டும் அவர்களை சேர்த்துக் கொண்டால் குழப்பம்தான் அதிகரிக்கும்" என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், ஓபிஎஸ்சை மட்டுமாவது சேர்த்துக் கொள்ளலாம் என இரண்டாம் நிலை தலைவர்கள் விரும்புகின்றனர். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் ஓபிஎஸ்சை சேர்க்க ஆட்சேபனை இல்லை. மற்றவர்களை வலியுறுத்த வேண்டாம் என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
சீட் ஷேரிங் பற்றி விவாதிக்கப்பட்ட போது, பாஜகவுக்கு என தனியாக அமித் ஷா பேசவில்லை. மாறாக, 'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு' என்று தான் பேசியுள்ளார். அதாவது, அதிமுகவுக்கும் என்.டி.ஏ.வுக்கும் 234 தொகுதிகளை சரிபாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்று அமித் ஷா சொல்ல, எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் ஏற்க மறுத்தனர். பல்வேறு சதவீத கணக்குகள் சொல்லப்பட்டு, அதிமுகவுக்கு 70 சதவீதம், என்.டி.ஏ.வுக்கு 30 சதவீதம் என்று அதிமுக தரப்பில் முன் வைக்கப்பட்டன.
30 சதவீத இடங்களில் ஓபிஎஸ், தினகரன் உள்பட யாரையெல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக விருப்பப்படுகிறதோ அந்த கட்சிகளுக்கு பாஜக தான் சீட் ஒதுக்கித் தந்து கொள்ள வேண்டும். அதிமுகவுக்கான 70 சதவீத இடங்களில் ஒரு சீட் கூட கேட்டு நெருக்கடித்தரக்கூடாது என்று அதிமுக தலைவர்கள் வலியுறுத்தினர். அதேசமயம், அமித் ஷாவோ, 60 : 40 என பகிர்ந்து கொள்ளலாம். 40 சதவீத இடங்களை என்.டி.ஏ. வுக்கு ஒதுக்குங்கள். கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் சீட் தந்து கொள்கிறோம் என்பதை சொல்லியிருக்கிறார்.
நாம் தமிழர் பாஜக கூட்டணி
அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கம் உருவாகி வரும் நிலையில்.. இன்னொரு பக்கம் பாஜக - நாம் தமிழர் கூட்டணியை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது சீமானை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி.. 80 சீட்டு நாம் தமிழருக்கு 80 சீட்டு பாஜகவிற்கு மீதம் உள்ள 74 சீட்டுகள் மற்ற கூட்டணிக்கு என்று வழங்க டெல்லியில் லாபி நடக்கிறதாம்.
தமிழக பாஜகவில் தற்போது 2 லாபிகள் உள்ளன என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று அதிமுக-பாஜக கூட்டணியை விரும்பும் லாபி. அதிமுகவை விரும்பாத சில மூத்த தலைவர்கள் உள்ளிட்ட மற்றொரு லாபி நாம் தமிழர் - பாஜக கூட்டணிக்கு அடிபோட்டுக்கொண்டு இருக்கிறதாம். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் எந்தப் பக்கம் வெற்றிபெறும்.. எந்த லாபி வெற்றிபெறும் என்பது தெரியும் என்கிறார்கள்.
டெல்லி அதிமுக கூட்டணியை விரும்புகிறது ஆனால் இபிஎஸ் இதுவரை பாஜகவின் கோரிக்கையை.. முக்கியமான சில கண்டிஷன்களை ஏற்கவில்லை. சீமானை பொறுத்தவரை, மோடி தன்னை முதல்வராக முன்மொழிந்தால் கூட்டணிக்கு தயார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதற்கு இடையேதான் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் பரவின. அதேபோல், சென்னையில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இதை தற்போது சீமான் மறுத்துள்ளார். நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று சீமான் மறுத்துள்ளார். இதுவும் கூட பாஜக - நாம் தமிழர் கூட்டணி பற்றிய விவாதங்களை அதிகரித்து உள்ளது.
மும்முனை போட்டி
இப்போது இந்த நிலவரப்படி பார்த்தால் தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை.
எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.
நாம் தமிழர் கேம் சேஞ்சர்
நாம் தமிழர் இதில் கேம் சேஞ்சர் ஆக முடியும். ஏனென்றால் அவர்களிடம் 8-10 சதவிகிதம் வாக்குகள் உள்ளன.
1. நாம் தமிழர் தனியாக நின்றால் 4 முனை போட்டி உருவாகி வாக்குகள் பிரியும். எதிரணி வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்கு சாதகம்.
2. அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றால்.. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க கூட சாதகமான சூழல் ஏற்படும்.
3. அதுவே விஜய் கூட்டணிக்கு போனால்.. விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும்.
4. சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் ஆக்டிவ் ஆகும் பட்சத்தில் அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம்.











Click it and Unblock the Notifications