இந்தச் சிறுவனா கருணாநிதி? ஆச்சரியப்பட்ட அண்ணா! திருவாரூர் மீலாது நபி விழாவில் முதல் சந்திப்பு!
சென்னை: அண்ணா பிறந்தநாளான இன்று அவரும் கருணாநிதியும் எப்போது எப்படி முதல்முறை சந்தித்துக் கொண்டார்கள், ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனது எப்படி என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் கருணாநிதி படித்துக் கொண்டிருந்த நேரம். அவர் எழுதிய 'இளமைப்பலி' எனும் கட்டுரையைத் 'திராவிட நாடு இதழுக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரையைத் தமது இதழில் வெளியிட்டுவிட்டு, அதற்கு அடுத்த வாரம் நடைபெற்ற 'நபிகள் நாயகம்' விழாவில் கலந்து கொள்வதற்காகத் திருவாரூருக்கு சென்றிருந்த அண்ணா, விழாக் குழுவினரிடம், இந்த ஊரில், "கருணாநிதி என்பவர் யார்? அவரை நான் பார்க்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார்.

அங்கிருந்தவர்கள், அண்ணாவிடம் கருணாநிதியை அழைத்துச் சென்று காட்ட, "கருணாநிதி, வயதிலும் அனுபவத்திலும் பெரியவராக இருக்கவேண்டும்" என்று எண்ணியிருந்த நிலையில், அண்ணா கருணாநிதியைபபார்த்ததும், "இந்தச் சிறுவனா. கருணாநிதி?" என வியப்போடு கேட்டுவிட்டு, பாசத்துடன் அவரை கட்டி அணைத்துக் கொண்டார். அதுதான், அண்ணாவும் கருணாநிதியும் சந்தித்த முதல் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் இயல்பாகவே மிகவும் எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர். மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதில் எப்போதும் விழிப்பாக இருப்பார். ஆத்திரமூட்டும் வகையில் விமர்சிப்பவர்களையும் சிரித்த முகத்துடன் அணுகக்கூடியவர்.

தம்மைக் கடுமையாகக் குறை கூறியவர்களும் நாணி, அவர் கருத்தை ஏற்கும் வகையில் மிகவும் நளினமாகப் பேசும் நாவன்மை மிக்கவர் அண்ணா. அவரிடமிருந்து பேசக் கற்றுக்கொண்டவர்கள் தான் கருணாநிதி, அன்பழகன், மதியழகன், உள்ளிட்ட இன்னும் பலர்.












Click it and Unblock the Notifications