என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? டெல்லிக்கு “அல்வா”.. இதான் வழி.. சீனியர்களுக்கு பாடம் எடுத்த எடப்பாடி!
சென்னை : பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது என அமித் ஷா சொன்னதை எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்த நிலையில், பாஜக உடனான கூட்டணியை விரும்பாத அதிமுக சீனியர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளனர். அவர்களுக்கு ஈபிஎஸ் சொன்ன பதில் தான் சீனியர்கள் மட்டத்தில் ஹாட் டாபிக்காம்.
பாஜக - அதிமுக இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், பாஜக தலைமை அதிமுக உடன் தான் 2024ல் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது.
தான் பொதுச் செயலாளராகிவிட்டாலும், தேர்தல் ஆணையம் இன்னும் பச்சைக்கொடி காட்டாத நிலையில், இப்போதைக்கு, பாஜகவுக்கு இணக்கமான வகையிலேயே பேச வேண்டும், மற்றதை தேர்தல் நெருங்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சீனியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

தலைவர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிடும் என்று என்று கூறி அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக பேசிய விவகாரம், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் கருத்துக்கு மூத்த பாஜக தலைவர்கள் சிலரே எதிராக கருத்து தெரிவித்தனர். இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளரானார். இதன் மூலம், அதிமுகவின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என உறுதியானது.

முன்னே அமித் ஷா பின்னே எடப்பாடி
அண்ணாமலையின் ஆக்ஷனுக்கு அதிமுக தரப்பில் இருந்து பெரிதாக எந்த ரியாக்ஷனும் வரவில்லை. அதேசமயம், அண்ணாமலை டெல்லிக்குச் சென்று பாஜகவின் டாப் தலைவர்களைச் சந்தித்து விட்டுத் திரும்பினார். அண்ணாமலையின் பேச்சால், பாஜக - அதிமுக கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தமிழ்நாட்டில் பாஜக - அதிமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறது என உறுதிபட கூறியிருந்தார். அமித் ஷாவின் பேச்சை அடுத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜக கூட்டணி தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

சில சீனியர்கள்
அதிமுக - பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியாகத் தான் போட்டியிட்டோம். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் சந்திப்போம் எனத் தெரிவித்தார். சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளரான உற்சாகத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, வருகிற மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக கூட்டணி தொடரவே விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவில் உள்ள ஒரு பிரிவினர், கூட்டணி தொடர்வதை ஏற்கவில்லை. அதன் வெளிப்பாடாகவே அவ்வப்போது பாஜக குறித்தும், அண்ணாமலை பற்றியும் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ரசிக்காத தலைவர்கள்
அதிமுகவில் கே.பி. முனுசாமி, பொன்னையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்ற பல முக்கிய தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக பாஜக கூட்டணியை விரும்பாமலே இருந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் 2024லும் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளதை அவர்கள் ரசிக்கவில்லையாம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும்போது இப்போதே ஏன் இப்படிச் சொல்லி சிக்கிக்கொள்ள வேண்டும், நம்மை எப்போதும் டிமாண்டாகவே காட்டிக்கொள்ளலாமே என அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுள்ளனர்.

சிக்கலாவிடும்
அதற்கு எடப்பாடி பழனிசாமி, பல மாத போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் கட்சி முழுமையாக நம் கைக்கு வந்திருக்கிறது. பொதுச் செயலாளர் பதவி கிடைத்த பிறகு தான் கட்சி அதிகாரப்பூர்வமாக நம் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இனி கட்சியை வளர்க்கும் வேலைகளில் ஈடுபட வேண்டும். அதேசமயம், ஓபிஎஸ் நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பார். தேர்தல் ஆணையம் இருக்கிறது, அங்கு இன்னும் நமக்கு சாதகமான எந்த வேலையும் நடக்கவில்லை. இப்போதே நாம் பாஜகவை பகைத்துக்கொண்டால் நமக்கு சிக்கலாகிவிடும், அமித்ஷா சொன்ன பிறகும் நாம் கூட்டணியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனப் பேசுவது முறையாக இருக்காது என்று கூறியுள்ளாராம்.

உண்மையாவே இப்படி பேசுறாரா
இப்போது கூட்டணி என்று சொல்லிவிட்ட காரணத்தாலேயே 2024ல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. தேர்தல் ஆணையத்திலும் நமக்கு சாதகமான நிலை வரட்டும். தேர்தல் நெருங்கும்போது கட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்வோம், இப்போதைக்கு இப்படித்தான் பேச வேண்டும். நீங்களும் பாஜக பற்றி விமர்சித்து எங்குமே பேசிவிட வேண்டாம், எல்லாம் நம் கைக்கு வரும்போது, நாம் எதிர்பார்ப்பதெல்லாம் நடக்கும் எனக் கூறி அமைதிப்படுத்தி இருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி உண்மையாகவே இந்த எண்ணத்தில் தான் இருக்கிறாரா அல்லது நம்மை சமாதானப்படுத்த இப்படிப் பேசுகிறாரா என சீனியர்கள் தலையைச் சொறிகின்றனராம்.












Click it and Unblock the Notifications