நிலவரம் சரியில்ல! மதுராந்தகம், தாராபுரத்தில் கள நிலவரம் தவெகவிற்கு எதிரா போகுது? கலக்கத்தில் விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை தீவிர பதற்றத்தில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த தவெகவுக்கு, உளவுத்துறை மற்றும் உள்ளூர் கள ஆய்வுகள் கொடுத்த ரகசிய ரிப்போர்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள நிலவரம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த பின்னரே, முதலமைச்சர் விஜய் முதல் ஒட்டுமொத்த அமைச்சரவையும் வீதி வீதியாக இறங்கி மெனக்கெடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Madurantakam

அதிர்ச்சியை தந்த கள ஆய்வு முடிவுகள்

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களையே வேட்பாளர்களாக களமிறக்கியது உள்ளூர் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி மக்களிடம் நடத்தப்பட்ட கள ஆய்வுகளில், "கட்சி மாறி வந்தவர்களுக்கே மீண்டும் சீட்டா?" என்ற சலிப்பு வாக்காளர்களிடம் வெளிப்படையாகத் தெரிகிறது.

விவசாயப் பிரச்னைகள், நீர் மேலாண்மை மற்றும் உள்ளூர் அடிப்படைத் தேவைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில், ஆளும் கட்சி மீது தொகுதி மக்களிடையே ஒருவித அதிருப்தி நிலவுவதாக ரகசிய அறிக்கைகள் எச்சரித்துள்ளன. இந்த இடைத்தேர்தலில் சறுக்கினால், அது அரசின் செல்வாக்கையே நேரடியாகப் பாதிக்கும் என்ற அச்சம் தவெக தலைமைக்கு வந்துள்ளது.

பயத்தால் மாறிய பிரச்சார பாணி: டிராக்டர், டீக்கடை வியூகம்

பொதுக்கூட்ட மேடைகளில் ஏறி ஆவேசமாகப் பேசுவது மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை தவெக தலைமை மிகத் தாமதமாகவே உணர்ந்துள்ளது. இதனால்தான் வழக்கமான ஹைடெக் பிரச்சார பாணியை ஓரங்கட்டிவிட்டு, தீவிர தரைமட்ட அரசியலை விஜய் கையில் எடுத்துள்ளார்.

மதுராந்தகத்தில் காலில் செருப்பு கூட இல்லாமல் வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டியதும், தெருவோர டீக்கடையில் அமர்ந்து சாதாரணமாக டீ குடித்துக் குறைகளைக் கேட்டதும் இதன் ஒரு பகுதியே ஆகும். மேல்தட்டு பிம்பத்தை உடைத்து, "நான் உங்களில் ஒருவன்" என்ற தோற்றத்தை அவசர அவசரமாக உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளார். கள நிலவரம் சாதகமாக இருந்திருந்தால், ஒரு மாநிலத்தின் முதல்வரே ஒரு இடைத்தேர்தலுக்காக இத்தனை மெனக்கெட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தாராபுரம், மதுராந்தகத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் படை

தோல்வி பயத்தின் மற்றொரு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுவது, அமைச்சரவையின் ஒட்டுமொத்த இடப்பெயர்வுதான். கோட்டையில் தலைமைச் செயலகப் பணிகளைக் கவனிக்க வேண்டிய அமைச்சர்கள் அனைவரும், கடந்த சில நாட்களாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளிலேயே தங்கியுள்ளனர்.

கிராமங்கள், வார்டுகள் மற்றும் பூத் வாரியாக அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வாக்காளர்களைக் கவரும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. வாக்காளர்கள் மாற்று முகாமுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, நிர்வாகிகளை நேரடியாகக் கண்காணிக்கும் பொறுப்பும் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கௌரவப் போரில் வெல்லுமா தவெகவின் தீவிர உழைப்பு?

இந்த இரு இடைத்தேர்தல்களும் ஆளும் தவெகவுக்கு சாதாரண இடைத்தேர்தல் அல்ல; அது ஒரு பலப்பரீட்சை. ஆளும் கட்சி என்ற பலம் இருந்தாலும், கள எதார்த்தம் எதிராக இருப்பதால் விஜய் வெளிப்படுத்தும் இந்த அதீத வேகம் வாக்குகளாக மாறுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கடைசி நேரத்தில் களமிறங்கி டிராக்டர் ஓட்டுவதும், டீக்கடைகளில் அமர்ந்து பேசுவதும் வாக்காளர்களின் மனதை மாற்றுமா அல்லது ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும். எதுவாக இருந்தாலும், பின்னடைவைச் சரிக்கட்ட முதல்வர் விஜய் தன் முழு பலத்தையும் இறக்கிப் போராடுவது களத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+