உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது வாரிசு அரசியலா? - எதிர்க்கட்சிகளை சைலன்ட் ஆக்கிய சில உண்மைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார், உதயநிதி ஸ்டாலின். 'இதை வழக்கம்போல 'வாரிசு அரசியல்' எனச் சொல்வார்கள். அதை நான் தவிர்க்க முடியாது, எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி விமர்சிப்பவர்களுக்கு எனது செயல்பாடுகளால் பதில் சொல்லவே விரும்புகிறேன்' என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக கடந்த 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், திமுக மீதான வாரிசு அரசியல் விமர்சனங்கள் மீண்டும் கிளம்பின.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடங்கி, பல கட்சிகளில் தலைவர்களின் வாரிசுகள், பெரிய பதவிகளைப் பெற்றிருப்பதும், இன்று ஆதிக்கம் செலுத்துவதும் நடந்தேறி இருக்கின்றன.

இளையராஜா சொன்னது என்ன?

இளையராஜா சொன்னது என்ன?

திமுகவைத் தாண்டி சிலர் உதயநிதிக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறியுள்ளனர். அதுவும் குறிப்பாக இளையராஜா, வாழ்த்தியிருக்கிறார். 'நீங்கள் பதவி ஏற்ற நாளிலே நான் வாழ்த்துவது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களது அம்மாவுக்குத்தான் இந்தச் செய்தி எல்லோரையும்விட மிகவும் சந்தோசமாக இருக்கும். இந்தப் பதவியில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அதேபோல, நடிகர் விஷால் கூறும்போது, 'இந்தக் காட்சியை நேரில் பார்க்க வேண்டும் என்பது எனது ஒன்பது வருடக் கனவாக இருந்தது. அது தற்போது நிறைவேறும்போது அவரது நண்பனாக நான் பெருமைப்படுகிறேன். எனக்குத் தெரிந்து உதயா என்ற எனது நண்பன் உதயநிதி ஸ்டாலின், தனது பெயரை எல்லா இடங்களிலும் முழுமையாகப் பயன்படுத்தப் போகிறார். இதுவரை அவர் ஸ்டாலினின் மகன் என்று பந்தா காண்பிக்காமல் இருந்திருக்கிறார். தனிப்பட்ட அடையாளத்துடன் வாழ்ந்து வந்தார்.

வெளிப்படையாகப் பேசிய விஷால்

வெளிப்படையாகப் பேசிய விஷால்

கடந்த 25 வருடங்களாக அதை அறிந்தவன் நான். எனது நண்பர்களின் பட்டாளத்தில் இன்னொரு நண்பர் அமைச்சராவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நண்பனாக உதயா அமைச்சராகப் பதவியேற்பது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அவர் அரசியல் ஈடுபாடே இல்லாமல் இருந்தார். அப்போது அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். இன்று அமைச்சராவது பெருமையாக இருக்கிறது' என்கிறார்.

விஷாலைத் தொடர்ந்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களும் உதயநிதியைப் பாராட்டி உள்ளனர். இயக்குநர் அமீர் கூறும்போது, "உதயநிதி அமைச்சராவது குறித்து விமர்சிக்க எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியில் வாரிசு அரசியல் இல்லை என சொல்ல முடியுமா? தேமுதிகவை சொல்ல முடியுமா? மதிமுகவை சொல்ல முடியுமா?

அதிமுகவை சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியை சொல்ல முடியுமா? உதயநிதியை அமைச்சராக்குவது என்பது அந்தக் கட்சியின் நிலைப்பாடு. அவர் அமைச்சராவதால் தமிழ்நாட்டுக்கு ஏதாவது இழப்பு வரப்போகிறதா? இந்தியா முழுவதும் வாரிசு அரசியல் பரவிக்கிடக்கிறது" என்கிறார்.

அதேநேரம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உதயநிதியின் நண்பருமான அன்பில் மகேஷ், உணர்ச்சிவசப்படும் அளவுக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். உதயநிதியின் வருகை, திமுகவுக்குள் ஒருமித்த வரவேற்பையே கொடுத்துள்ளது.

திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் சக கட்சியினர் உதயநிதியின் புதிய பதவி குறித்து என்ன சொல்கிறார்கள்? அவர்கள் தரப்பில் வைக்கப்படும் கருத்து என்ன?

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

உதயநிதிக்கு அமைச்சர் பதவியை கொடுத்ததே மிகத் தாமதம் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவரை முன்னரே அமைச்சராக ஆக்கி இருக்க வேண்டும். கட்சியின் வெற்றிக்காக அந்தளவுக்கு அவர் பணியாற்றியவர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்போடு செயலாற்றுகின்ற ஒருவர். ஆகவே, உதயநிதியைப் பொறுத்தவரை இந்தப் பதவியே ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாகத்தான் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அவரை எனக்கு சிறுவயதிலிருந்து தெரியும். மிகத் திறமையான இளைஞர். அனைத்துத் துறைகளைப் பற்றியும் அறிவு உள்ளவர். அவர் சட்டமன்ற உறுப்பினராக பயிற்சி பெற்றபின் இந்தப் பதவியைத் தரலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்திருந்தார் என்பது என் ஊகம்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

'அரசியலில் விமர்சனமே இருக்காது' எனச் சொல்ல முடியாது. நாங்கள் ஒரு பட்ஜெட் போட்டால் விமர்சிக்க மாட்டார்களா? நாங்கள் ஒரு கொள்கையைக் கொண்டு வருகிறோம் என்றால் அதை விமர்சிக்க மாட்டார்களா? அதைப்போல உதயநிதிக்கு அமைச்சர் பதவி தந்ததை விமர்சிக்கிறார்கள்.

திமுக ஒரு தத்துவார்த்தரீதியான இயக்கம். ஆகவேதான், அண்ணா முதல் கலைஞர் வரை திராவிட இயக்கம் என்றார்கள். இதை திராவிட மாடல் அரசாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார். கட்சியின் தத்துவார்த்த கருத்துகளை முன்னெடுத்துக் கொண்டு போவதற்கு உதயநிதியால் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வீட்டை நிர்வகிப்பதற்கு அவருக்குத் தகுதி இருக்கிறது. அதற்கான ஒத்திசைவைப் பொதுமக்களிடம் எதிர்பார்க்கிறோம் என்கிறார் திமுக எம்.பி ஆ.ராசா.

ஆளூர் ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், வி.சி.க)

ஆளூர் ஷாநவாஸ் (சட்டமன்ற உறுப்பினர், வி.சி.க)

திமுக ஆளும் கட்சியாக இருந்தபோது உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்படவில்லை. அவர் தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களிடம் சென்று வாக்குகளைப் பெற்று அதன்பின் வென்று வந்திருக்கிறார். அப்படி வந்தவருக்குத்தான் ஒன்றரை ஆண்டுகள் கழித்துப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளில் வாரிசுகள் எப்படிப் பதவிகளைப் பெற்றார்கள்?

உதாரணமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து தொடங்கலாம். ஜெயலலிதா எடுத்த எடுப்பிலேயே மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். அதிமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளர் ஆக்கப்பட்டார். அப்போது அதிமுக ஆளும் கட்சி. அதற்கு முன்னால் அவரது அரசியல் செயல்பாடு என்ன என்று பார்த்தால், ஒன்றும் கிடையாது.

அதைப்போல அன்புமணி ராமதாஸ். எடுத்த எடுப்பிலேயே மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். அதன்பின் மத்திய அமைச்சராக்கப்பட்டார். 'மக்களிடம் சென்று வாக்குகளைப் பெற்று உன்னை நிரூபித்து வா?' என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை. நியமனப் பதவியின் மூலம் பெரிய பதவியை எடுத்த எடுப்பிலேயே பெற்றார்.

அதேபோல ஜி.கே.வாசன். அவரும் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு, மத்திய அமைச்சராக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், ஆளும்கட்சியாக இருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். அவரும், அதிமுக ஆட்சிக்காலத்திலேயே பதவியைப் பெற்றார்.

இவர்கள் எல்லாம் பெற்றதைப்போல திமுக ஆட்சிக்காலத்தில் உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக நிறுத்தப்படவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது நின்று வென்று வந்திருக்கிறார். இந்த வேறுபாட்டை மக்கள் அறிவார்கள். எனவே உதயநிதி, தனது திறமையையும் ஆற்றலையும் நிரூபித்துத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.

அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு

நாடாளுமன்றத் தேர்தலில்தான், முதன்முதலாக உதயநிதி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலினால் எங்கெல்லாம் செல்ல முடியவில்லையோ அங்கு எல்லாம் உதயநிதி அனுப்பப்பட்டார். அதற்குக் காரணம், அவருக்குத் திரை நட்சத்திரம் என்கிற அடையாளம் உள்ளது. அதைவைத்து அவரால் எளிமையாக மக்களிடம் செல்ல முடிகிறது. அவர் திமுகவுக்கு அத்தியாவசியமானவர். மக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+