விருத்தாசலத்தில் களமிறங்கும் விஜய்? அதே ரூட்.. அதிமுகவுடன் கூட்டணி.. புட்டு புட்டு வைக்கும் புள்ளி!
சென்னை: எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணி அமையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன. திமுக, பாஜகவை விமர்சித்த விஜய், அதிமுகவை சீண்டவே இல்லை. அதேபோல, அதிமுகவும் விஜய்யை மென்மையாகவே அணுகுகிறது. இதெல்லாம் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான முன்னோட்டமே என்கிற பார்வை முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கூட்டணி சாத்தியமா என நம்முடன் அலசி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
கேள்வி: வட தமிழ்நாட்டில் பயணித்த வகையிலும், விஜய்யின் மாநாட்டை உற்று கவனித்த வரையிலும், விஜயகாந்த் எங்கு எழுச்சி பெற்றாரோ, அதே இடத்தில் தான் விஜய்யும் ஆரம்பித்துள்ளதை களத்தில் பார்க்கமுடிகிறது. விசிக தலைவர் திருமாவளவன் விஜய்யை எதிர்ப்பதற்குப் பின்னணியில், தனது வாக்கு வங்கியில் விஜய் சேதாரத்தை ஏற்படுத்துவார் என்ற எண்ணம் காரணமா?

ப்ரியன்: விஜயகாந்த், முதல் முறை விருத்தாசலத்தில் வென்றார். அதேசமயம் தேமுதிகவுக்கு தெற்கிலும் குறிப்பிடத்தக்க ஆதரவு இருந்தது. வட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், விஜயகாந்த்துக்கு எப்படி ஆதரவு அளித்தார்களோ அதே அளவுக்கு இன்றைக்கு விஜய்க்கும் ஆதரவு கிடைத்திருக்கிறது. விஜய், வட தமிழகத்தில் வன்னியர்கள் வாக்குகளையும், பட்டியலினத்தவர் வாக்குகளையும் அதிகம் பெறுவார். விஜயகாந்த் போலவே, விஜய் விருத்தாசலத்தில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: விஜய்யின் அரசியலை நாதக, விசிக, திமுக, பாஜக என பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலினே, விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் நேற்று விமர்சித்திருக்கிறார். ஆனால், அதிமுக, விஜய்யை நட்பு சக்தி என்ற பார்வையிலேயே அணுகுவது போல தெரிகிறதே.. இது அதிமுகவுக்கு நல்லதா?
ப்ரியன்: விஜய்யோடு கூட்டணி வைக்கும் எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அதனை விஜய் ஏற்க வேண்டுமே.. அதிமுகவோடு கூட்டணி சேரும்போது விஜய்யின் இமேஜ் அடிபடும். புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கட்சியோடு இணைந்தால் அது எப்படி சரியாக வரும்? வலிமை இழந்த அதிமுகவை எதற்கு அட்டாக் செய்யவேண்டும் என்றுதான் கண்டுகொள்ளாமல் செல்கிறார் விஜய்.

வலிமையான கூட்டணி அமைக்கும் நோக்கில் அதிமுக விஜய்யோடு சேர்ந்தால், பாமகவும் அந்தக் கூட்டணியில் இணைந்தால், அது வலிமையான கூட்டணியாக அமையக்கூடிய சாத்தியம் உள்ளது. அப்படி அமையும்போது அது திமுகவுக்கு சவாலாக இருக்கும். ஆனால், இந்தக் கூட்டணி மூலம் விஜய் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.
விஜயகாந்த் போல விஜய் தனித்து நின்று தனது பலத்தை அறிய முயற்சி செய்ய வாய்ப்புகள் அதிகம். விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற நம்பிக்கையின் பெயரில் அதிமுக ஒரு சாஃப்ட் நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால், அரசியலில் திருப்பங்கள் பல நடக்கலாம். இதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கேள்வி: தேமுதிகவை தொடங்கியபோதும், விஜயகாந்த் அதிமுகவை அதிகமாக விமர்சனம் செய்யவில்லை. திமுகவைத்தான் கடுமையாக தாக்கினார். அதிமுகவும் தேமுதிகவை அதிகம் தாக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களில் ஜெயலலிதா விஜயகாந்த்தை கடுமையாக தாக்கிப் பேசினார். அதன் பிறகு தான் இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். அதிமுக வாக்குகள் தேமுதிகவுக்கு சென்றது தெரிந்தபிறகு தான் ஜெயலலிதா, விஜயகாந்த்தை விமர்சிக்கத் தொடங்கினார். அதே மாதிரியான ஒரு விஷயம் விஜய்க்கு நடக்க வாய்ப்பு உள்ளதா? திமுக எதிர்ப்பு நிலையை கடுமையாக எடுக்கும்போது, அதிமுக தொண்டர்களும் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்பிருக்கிறதா?
ப்ரியன்: மக்கள் அதிமுக மீதான நம்பிக்கையை இழந்ததால் தான் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதிமுக அனுதாபிகள் பலர் இன்றைக்கு அக்கட்சிக்கு ஆதரவாக இல்லை. அவர்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து வருகிறார்கள். அவர்கள் இனி விஜய்க்கு வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது. திமுக எதிர்ப்பை தீவிரமாக பேசும் போது விஜய்க்கு அந்த வாக்குகள் அதிகம் செல்லக்கூடும்.
திமுக 2006ல் மைனாரிட்டி இடங்களில் வென்றுதான் ஆட்சியைப் பிடித்தது. நிறைய தொகுதிகளில் அன்றைக்கு அதிமுக தோல்விக்குக் காரணம் தேமுதிக வாக்குகளைப் பிரித்ததால் தான். அதனால் தான் அன்று ஆட்சியை இழந்தது அதிமுக. அந்த எண்ணத்தால் தான் விஜயகாந்த்தை தாக்கத் தொடங்கினார் ஜெயலலிதா. எடப்பாடி பழனிசாமி விஜய்யை நட்பு சக்தி என நினைத்தார் என்றால் அதுவே அவருக்கு எதிராக திரும்பக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications