ஓரம்கட்டப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.. மேலே வரும் புதிய தலைகள்.. விஜய் ஆடும் ஆட்டம்!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போது மிக முக்கியமான அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஒரு இயக்கம் தேர்தல் அரசியலில் தடம் பதித்து, அதிகாரக் கட்டமைப்புக்குள் நுழையும் போது இத்தகைய முரண்கள் எழுவது இயல்பு என்றாலும், தவெகவின் தொடக்கக் கால தூண்களாக விளங்கிய பழைய விசுவாசிகளுக்கும், புதிதாக உருவெடுத்துள்ள அதிகார மையத்திற்கும் இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.
இந்த உட்கட்சி மோதலின் மையப்புள்ளியாக நிற்பவர் கட்சியின் பொதுச்செயலாளரும் மூத்த பொறுப்பாளருமான புஸ்ஸி ஆனந்த். பல பத்தாண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தை ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக வடிவமைத்ததில் புஸ்ஸி ஆனந்திற்கு முக்கியப் பங்கு உண்டு.

நேரடிப் பாலமாகச் செயல்பட்டவர் புஸ்ஸி ஆனந்த்
தலைமைக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் இடையிலான நேரடிப் பாலமாகச் செயல்பட்டவர் அவரே. ஆனால், கடந்த சில வாரங்களாக கட்சியின் உயர்மட்ட அதிகார வட்டாரத்தில் அவருடைய ஆதிக்கம் வேகமாக சரிந்து வருவதாக உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் இந்த முரண்பாடு வெளிப்படையாகவே தென்படத் தொடங்கியுள்ளது. முன்பு எப்போதுமே விஜய்யின் மிக அருகாமையில் இருந்து ஆலோசனை வழங்கிய புஸ்ஸி ஆனந்தின் இருப்பு தற்போது கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. மாறாக, மூத்த அரசியல் ஆளுமையான கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் ஆதவ் அர்ஜுனா போன்றோருடன் கட்சித் தலைமை தீவிர ஆலோசனைகளில் ஈடுபடுவது கட்சித் தொண்டர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அடிமட்டத் தொண்டர்கள் இதைத் தங்களின் தொடக்கக்கால விசுவாசிகளை ஓரங்கட்டும் நகர்வாகவே பார்க்கின்றனர்.
தமக்கு மிக நெருக்கமானவர்களிடம் புஸ்ஸி ஆனந்த் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தகவல்கள் கசிகின்றன. தலைவருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு குறைந்துவிட்டதாகவும், முக்கிய கொள்கை முடிவுகளிலும் நிர்வாக நியமனங்களிலும் பழைய தூண்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபையில் கூட விஜய் புஸ்ஸி ஆனந்தை கண்டுகொள்வது இல்லையாம். அதோடு செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஸ்கோர் செய்யும் அளவிற்கு புஸ்ஸி ஆனந்த ஸ்கோர் செய்வது இல்லையாம். விஜய் சட்டசபையில் அவ்வப்போது ஆதவ் அர்ஜுனாவிடம் பேசுகிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்திடம் பேசுவது இல்லை. இதனால் சுவரொட்டிகள் ஒட்டி, கொடிகள் ஏந்தி, தங்களின் இளமைக்காலத்தை இந்த இயக்கத்திற்காக அர்ப்பணித்த உண்மையான களப்பணியாளர்கள் தற்போது அதிகாரக் காரிடார்களில் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனை அடிமட்ட அளவில் வலுத்து வருகிறது.
களப்பணியாளர்கள் கட்சிப் பணிகளுக்காகவோ அல்லது நிர்வாக நலன்களுக்காகவோ அணுகும்போது, மேலிடத்திலிருந்து கிடைக்கும் பதில்கள் உதாசீனப்படுத்தும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. தேர்தல் அரசியலின் பெயரால், இயக்கத்தின் ஆரம்பகால வரலாறே தெரியாத புதிய வரவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை பழைய விசுவாசிகளால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்த விரிசலை ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட பிரச்சார ஒருங்கிணைப்பாளர்களும் வியூகக் குழுவினரும் கையாளும் விதம் பழைய நிர்வாகிகளை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே சுமுகமான பாலத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, புதிய அதிகாரக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதிலேயே விஜய் தீவிரமாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் தலைமை தங்களின் குரலைக் கேட்பதே இல்லை என்ற அவநம்பிக்கை தொண்டர்களிடம் பரவி வருகிறது.
புஸ்ஸி ஆனந்தோடு நின்றுவிடவில்லை
இந்த நிச்சயமற்ற சூழல் புஸ்ஸி ஆனந்தோடு நின்றுவிடவில்லை. ரசிகர் மன்றத்தின் வழியே அரசியலுக்கு வந்து முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் பல நிர்வாகிகள், அடுத்தகட்டப் பொறுப்பு மாற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர். பெரும் நிர்வாகப் பணிகளைக் கையாள அடிமட்டப் பொறுப்பாளர்கள் தகுதியற்றவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி, அவர்களை ஓரங்கட்ட உள்ளுக்குள்ளேயே முயற்சிகள் நடப்பதாகப் பேசப்படுகிறது.
பல ஆண்டு கால விசுவாசத்திற்கும், தற்போதைய நிதர்சனமான அரசியல் வியூகங்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் தவெகவின் தொடக்கக்கால விசுவாசிகள், இந்த அதிகாரப் போட்டியைத் தலைமை எவ்வாறு சமரசம் செய்யப்போகிறது என்பதை மிகுந்த கவலையோடு கவனித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
