விஜய் கட்சிக்கு தனி சின்னம் ரெடி? என்ன தெரியுமா? தவெக பக்கம் மெல்ல நகரும் காங்கிரஸ்!
சென்னை: தனி சின்னம் கேட்டு விஜய் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில் இடம்பெற்றுள்ள விசயங்கள் என்ன என்பது பற்றி தகவல் கசிந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கு வரும் தொண்டர்கள் மது அருந்திவிட்டு வரக் கூடாது, என்றும் வரும் வாகனங்களில் சாகசங்களைச் செய்யக்கூடாது என்றும் 10 கட்டளைகளை விஜய் அறிவித்திருந்தார்.

அதேபோல தொண்டர்கள் வரும் வாகனங்கள் முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் நகலைத் தலைமைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் ஒருநபர் குறைந்தது 10 பேரையாவது அழைத்து வரவேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக் கட்டளைகள் மூலம் மதுவுக்கு எதிரானவராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட விஜய், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு ஆதரவோ அது குறித்து கருத்தோ சொல்லவில்லை. ஆரம்பத்தில் திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய், அரசியலைக் கடந்த மது ஒழிப்பு மாநாடு பற்றி வாய் திறக்கவில்லை.
விஜய் தன் மாநாட்டில் தான் கட்சியின் கொடி, அதற்கான விளக்கம், கொள்கை என அனைத்தையும் வெளியிட இருக்கிறார். கிட்டத்தட்ட அவரது கட்சியின் கொள்கை என்பது திமுக ப்ளஸ் இடதுசாரி மற்றும் அம்பேத்கர் சேர்ந்த கலவையாகவே இருக்கும் என்கிறார்கள். மேற்கொண்டு அதில் ஒன்றும் புதுமை இருக்காது என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், வரும் 2026இல் விஜய் காங்கிரஸ் பக்கம் போக வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் தெரிவித்திருக்கிறார். அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், "நான் விஜய்யின் புதிய கட்சி பற்றியும் அவரது அரசியல் பிரவேசம் பற்றியும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசினேன்.
அவர்களிடம் இருந்து எனக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால், விஜய் அரசியல் பிரவேசத்தைக் காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. விஜய் காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்பில் இருக்கிறார். குறிப்பாக சொன்னால், திருமாவளவன் வழியாக விஜய் காங்கிரஸ் மேல் மட்டத்தோடு தொடர்பில் உள்ளார்.
இந்த மாதம் 27 ஆம் தேதி விஜய் மாநாடு நடக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். அதில் காங் தலைவர்கள் யாரேனும் ஒருவர் பங்கேற்கலாம். மல்லிக்கார்ஜுன கார்கே கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. ஏனென்றால், அதற்குள் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வந்துவிடும். அரசியல் சூழல் மாறிவிடும். அதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், கார்கே கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை.
இருந்தாலும் சிறப்புப் பிரதிநிதிகள் யாரேனும் கலந்துகொள்வார்கள். இதேபோல் பாஜக வட்டாரத்தில் பேசும் போது வேறு கருத்தைச் சொல்கிறார்கள். திமுக எதிர்ப்பு ஓட்டுகளை இழுப்பதற்காகவே திமுகவினால் களம் இறக்கப்பட்டுள்ளவர் விஜய் என்று சிலர் சொல்கிறார்கள். தவெக என்பது திமுகவின் பி டீம் என்று கருதுகின்றனர்.
விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. தீபாவளிக்கும் சொல்ல வாய்ப்பு இல்லை. அவர் நீட் தேர்வை எதிர்க்கிறார். ஆகவே அவர் திமுகவின் பினாமி கட்சி என்கிறார்கள். வேறு சிலர் விஜய் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உள்ளார் என்கிறார்கள். அதற்கு ஒரு ஆதாரமும் கிடைத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் விஜய் அரிவாள் நடுவே ஒரு பேனா இருப்பதையே தேர்தல் சின்னமாகக் கேட்டுள்ளார். அதற்கான அனுமதி பெறவே பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காகவே மாநாட்டை இந்த மாதம் இறுதியில் விஜய் தள்ளி வைத்துள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
ஒருவேளை திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி ஒத்துவரவில்லை எனில் 2026இல் காங்கிரஸ் விஜய் பக்கம் போகலாம். கூடவே கம்யூனிஸ்ட் கட்சியும் திருமாவளவனும் கூடப் போக வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் 3 அணிகள் என்பது உறுதியாகி உள்ளது. சீமான் தனித்துப் போட்டியிட்டால் 4 அணியாக ஒருவேளை மாறலாம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications