திமுகவைவிட தவெகதான் முக்கிய எதிரியா? இதுதான் அசைன்மென்ட் போல! சீமானை வெளுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ஸ்டாலினை சந்தித்த பிறகு.. விஜய்யிடம் மோதப்போவதாக சீமான் சொல்கிறார். இதுதான் அந்த சந்திப்பில் தரப்பட்ட அசைன்மென்ட் போல. நித்தம் ஒரு நிறம். நித்தம் ஒரு பேச்சு. ஆளும் திமுகவைவிட.. தவெகதான் முக்கிய எதிரி எனும் இந்நாடகம் மக்களிடம் எடுபடாது என்று 'ப்ளூ சட்டை மாறன்' நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் விஜய், தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூறியுள்ளார். விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்து தனது முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கையை அறிவித்ததும், அவரை கடுமையாக விமர்சித்தவர் சீமான்.

ஸ்டாலினை சந்தித்த சீமான்
இதன்பின் விஜயை பெரியளவில் சீமான் சீண்டவில்லை. இந்த நிலையில், அண்மையில் மு.க. முத்து மறைவுக்குப் பின் முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து சீமான் மற்றும் நாதக நிர்வாகிகள் ஆறுதல் கூறினர். தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும் கூட சீமான் - ஸ்டாலின் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த சந்திப்பு நடைபெற்றதால் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று இருந்தது.
இந்த நிலையில்தான் நேற்று சென்னை சேப்பாக்கம் பகுதியில் நாதக சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கொள்கைக்கு, லட்சியத்திற்கு எதிராக யார் வந்தாலும் எதிரி தான். இனி பாவம் பார்க்கக் கூடாது. லட்சியக் கூட்டத்திற்கும், ரசிகர் கூட்டத்திற்கும் இடையிலான போர்.. சண்டைதான்..
கொலை வெறியில் இருக்கிறேன்
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை கனவைக் கொண்டுள்ள சித்தாந்தமா? அல்லது சினிமாவா? இதுதான் சண்டை.. கொலை வெறியில் இருக்கிறேன். எல்லா வேதனைக்கும் ஒரே மருந்து சாதனை மட்டும்தான். உறவுகள் எனக் கருதி சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து இனி பழகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களை அரசியல் புரிதலற்ற சினிமா ரசிகர்கள் என்றும் சீமான் மறைமுகமாக சாடியிருந்தார்.
சீமானின் இந்த பேச்சை வைத்து பார்க்கும் போது வரும் தேர்தல் பிரசாரத்தின் போது விஜய்யை கடுமையாக விமர்சிப்பார் என்று அரசியல் விமர்சகர்களின் யூகமாக உள்ளது. இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சீமானின் நேற்றைய பேச்சை அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் இதுதான் போல் தெரிகிறது என்று விமர்சித்து இருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
இதுதான் அசைன்மெண்ட் போல
இத்தனை நாட்கள் திமுகவை தனது எதிரியாக கூறிக்கொண்டிருந்தார். இப்போது விஜய்-க்கு எதிராக பாய்கிறார். தவெகவின் முதல் மாநாடு முடிந்தபிறகு.. ரோட்டு நடுவுல நின்னா அடிபட்டு சாவ என சாபம் விட்டார். ஈரோடு இடைத்தேர்தல் சமயத்தில் நாதகவின் பல இளைஞர்கள் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு போய் விட்டனர்.
அந்த பதற்றத்தில் மீண்டும் 'விஜய் என் தம்பி' என பேசி வந்தார். தற்போது ஸ்டாலினை சந்தித்த பிறகு.. விஜய்யிடம் மோதப்போவதாக சொல்கிறார். இதுதான் அந்த சந்திப்பில் தரப்பட்ட அசைன்மென்ட் போல. நித்தம் ஒரு நிறம். நித்தம் ஒரு பேச்சு. ஆளும் திமுகவைவிட.. தவெகதான் முக்கிய எதிரி எனும் இந்நாடகம் மக்களிடம் எடுபடாது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications