கர்நாடகா சிஎம் டிகே சிவகுமார் சொல்வது உண்மையா? முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி கேள்வி
தென்காசி: மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதா? கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களின் கூற்று உண்மையா? தமிழகத்திற்கு எதிராக சதி நடக்கிறதா? தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இதன் உண்மைத் தன்மை குறித்து உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாடு எல்லையிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து கர்நாடக அரசு எடுத்து வருகிறது. அந்த முயற்சி வெற்றிபெறுமேயானால் ஏற்கனவே வறட்சிக் காலங்களில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பையும் கர்நாடக அரசு அமல்படுத்த முன்வராத சூழ்நிலைகளில் டெல்டா மாவட்டங்களில் ஏறக்குறைய 10 லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிட முடியாத மிகப்பெரிய ஒரு அசாதாரண சூழல் உருவாகிவிடும்.

இந்த ஆண்டு திட்டமிட்டபடி, ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; அதனால் குறுவை சாகுபடியை தொடங்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினுடைய அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய காவிரி நீர் பங்கீட்டை முறையாக கொடுக்க முன்வராத கர்நாடக அரசு கூடுதலாக இன்னொரு அணையை கட்டும் பட்சத்தில் மழைக்காலத்தில் வரக்கூடிய உபரி நீரையும் தேக்கி வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கு கை விரிக்கக்கூடிய அபாயகரமான சூழல் உருவாகும்.
காவிரி நதிநீர் மேலாணயத்தின் தீர்ப்பின்படி, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தவிதமான அணையும் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட முடியாது. அப்படி இருக்க மேகதாது அணை கட்டுவதற்கு 177 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனான அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என்று கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, நதிநீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று ஆணையங்கள் கொடுக்கக்கூடிய உத்தரவுகளை ஒருபோதும் கடைபிடிக்காத கர்நாடக அரசு இப்பொழுது உச்ச நீதிமன்றம் கொடுக்கக்கூடிய தீர்ப்பை மட்டும் அமல்படுத்தி விடவா போகிறது? ஏதோ ஒரு சதி தமிழகத்திற்கு எதிராக நடப்பதுபோல் தோன்றுகிறது.
மேகதாது அணையை எக்காரணத்தைக் கொண்டும் கட்ட அனுமதிக்கப்படக்கூடாது. அது எட்டு கோடி தமிழ் மக்களுக்கும் இழைக்கப்படக்கூடிய அநீதியாக மாறிவிடும். கர்நாடக அரசினுடைய எந்த அரசியல்வாதிகளின் பேச்சையும் நம்ப முடியாது. காவிரி நீரைப் பொறுத்தமட்டிலும் அங்கு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பிராந்திய கட்சிகள் அனைவரும் ஒரே குரலில் பேசுகிறார்கள்.
அவர்களுடைய ஆசை வார்த்தைகள் எல்லாம் மேகதாது அணை கட்டுகின்ற வரையில் மட்டும்தான் இருக்கும். அந்த அணை கட்டி முடிக்கப்பட்டு விட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதற்கு வாய்ப்பு குறைந்து போய்விடும். தமிழகத்தினுடைய ஒப்புதல் இல்லாமல் உச்ச நீதிமன்றம் எப்படி தீர்ப்பு கொடுத்திருக்க முடியும்? எந்த அடிப்படையில் தைரியத்தில் டி.கே. சிவகுமார் அவர்கள் மேகதாது அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது என்று சொல்லுகிறார்?
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் சிறிதும் காலம் தாழ்த்தாது அதனுடைய உண்மை தன்மை குறித்து தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஏற்கனவே, தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுடைய தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. மேகதாது பிரச்சனை நமது கைமீறி போகும் அளவிற்கு மோசமான சூழல் உருவாகி இருப்பதாக தெரிகிறது.
எனவே, அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் எனவும், சிவகுமார் அவர்களுடைய மேகதாது அணை குறித்த பதிவு குறித்து உண்மை தன்மையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
