இசக்கி சுப்பையா இறக்கிய இடி.. அவசரமாக ராஜினாமா செய்ய இதுதான் காரணமா? அம்பாசமுத்திரம் அலறுதே
சென்னை: அம்பாசமுத்திரம் அரசியல் களம் நேற்று முதல் கொதித்து கொண்டிருக்கிறது.. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா விவகாரம் இப்போது புயலை கிளப்பியுள்ளது. ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு, திடீரென "அதை வாபஸ் வாங்குங்க.. இல்லாவிட்டால் தேர்தலை வைங்க' என்று சபாநாயகர் வாசலில் அவர் நின்றுகொண்டிருப்பது தவெக தலைமைக்கே பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெகவில் இணைவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தவர் இசக்கி சுப்பையா.. திடீரென தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாகவும், இல்லாவிட்டால் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்தது மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கொதிக்கும் தவெகவினர்
முக்கியமாக, இசக்கி சுப்பையாவின் இந்த பல்டியை தவெக உடன்பிறப்புகளால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. "அதிமுகவில் அநியாயமாக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதினார்கள்" என்று அவர் வெளியே புலம்புவது உள்ளூர் தவெக நிர்வாகிகளை கொதிக்க வைத்துள்ளதாம்.
"தவெக சென்ற 2 மாதத்திலேயே, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் என இரண்டு பெரிய பொறுப்புகளை தலைமை வழங்கியது... அப்படியிருந்தம் களத்தில் சிறிதும் வேலை செய்யவில்லை.. அம்பாசமுத்திரத்தில் இரட்டை இலை சின்னத்தின் தயவால் எம்எல்ஏவாகிவிட்டு, இப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாடகமாடுகிறார்.. இதனால் அதிமுகவும் இவர்மீது ஆத்திரத்தில் உள்ளது.
இடைத்தேர்தலை விரைந்து நடத்த கோரி தவெக தலைவர் மனு தாக்கல் செய்யும்போது, இசக்கி சுப்பையா, "ராஜினாமாவை திரும்ப பெறுகிறேன்" என்று கோர்ட் படியேறுவது முரணாக உள்ளது. அப்படியானால் மீண்டும் அதிமுகவுடனே ரகசிய டீல் பேசிவிட்டாரோ? தெரியவில்லை" என்று எரிச்சலுடன் சொல்கிறார்களாம்.
அமைச்சராகும் கணக்கா?
ஆனால், இசக்கி சுப்பையா தரப்போ, "தவெகவில் 2 பெரிய பதவி தந்தாலும், அவை ஒன்றும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடையாது.. உள்ளூர் நிர்வாகிகளும் இசக்கி சுப்பையாவுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பதால்தான், இடைத்தேர்தலில் நின்று, களத்தில் வெற்றி பெற்று, அமைச்சராகி விடலாம் என்று கணக்கு போடுகிறார்" என்கிறார்கள்.
களமிறங்கிய அதிமுக
ராஜினாமா செய்த இசக்கி சுப்பையாவின் இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாகச் சுக்குநூறாக உடைக்க அதிமுக உறுதியாக களமிறங்கியுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியை எப்பாடுபட்டாவது மீண்டும் தங்களது கோட்டையாகத் தக்கவைக்கவும், தவெகவுக்குத் தாவிய முன்னாள் நிர்வாகிக்கு எளிதாக வழிவிட்டுவிடக் கூடாது என்பதிலும் அதிமுக தலைமை துடிப்பாக உள்ளது.
ஒருவேளை இடைத்தேர்தல் வந்தால், அதனை எப்படிக் கையாள்வது என்பது குறித்த மாஸ்டர் பிளானை அக்ரி கிருஷ்ணமூர்த்தி மூலம் இப்போதே ரகசியமாக தீட்டி வருகிறது எடப்பாடி தரப்பு.
சீமான் வேற ரெடியா இருக்காரே
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் தன் கையால் எழுதி வழங்கும் ராஜினாமா கடிதம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால், அதனை பின் வாங்குவதற்கு சட்டத்தில் கொஞ்சமும் இடமில்லை. அதனால் இசக்கி சுப்பையாவின் ராஜினாமா தடையின்றி செல்லும்பட்சத்தில் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதே இதற்கான இறுதியான முடிவாக இருக்க முடியும்.
கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் சபாநாயகர் எடுக்கும் உறுதியான முடிவை பொறுத்தே இந்த அத்தனை குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும். ஏற்கனவே சீமான் இந்த தொகுதியை டார்கெட் செய்து காய் நகர்த்தி வரும் சூழலில், தவெக தலைமை இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது? இசக்கி சுப்பையாவை நம்பி களத்தில் இறங்குமா? அல்லது இந்த உள்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!


Click it and Unblock the Notifications
