சென்னை, கரூரில் ரெய்டு: வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளன.. வருமான வரித்துறை தகவல்!
சென்னை: சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் 12 மணி நேர சோதனை நடத்தினர்.
''வருமான வரித்துறை சோதனை நடத்தி எங்களை மிரட்ட முடியாது'; யாருக்கும் அஞ்ச மாட்டோம்'' என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள், முக்கிய அரசியல் கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் மகள் வீட்டில் அதிரடி சோதனை
இதில் நேற்று குறிப்பிட்ட இடங்களில் நடந்த சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் 12 மணி நேர சோதனை நடத்தினர். அவரது கணவர் சபரீசன் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

செந்தில் பாலாஜிக்கும் குறி
கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக், ராயனூரில் உள்ள திமுக நகரச் செயலாளர் தாரணி சரவணன் ஆகியோரின் வீடுகளிலும், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.பிரபல தனியார் மதுபான ஆலை உரிமையாளர் ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

ஸ்டாலின் கண்டனம்
சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசனின் வீட்டிலும் ஒரு மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. ''வருமான வரித்துறை சோதனை நடத்தி எங்களை மிரட்ட முடியாது'; யாருக்கும் அஞ்ச மாட்டோம்'' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பா.ஜ.க.வின் தோல்வி பயம்
இதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பா.ஜ.க தோல்வி பயத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஏஜென்சிகளை கைப்பாவையாக வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஏவி வருகிறது என்று கண்டனம் தெரிவித்தனர்.

வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளன
இந்த நிலையில் 3 குழுமங்கள், தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், சில குழுமங்கள், தனிநபர்கள் அரசியலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications