4-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.. ஜெகத்ரட்சகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்?
சென்னை: கடந்த 5-ம் தேதி முதல் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள், உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது அதிமுக எம்.பி.யாக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பின்னர் அவர் எம்.ஜி.ஆர். கழகம், வீரவன்னியர் பேரவை, அதைத் தொடர்ந்து ஜனநாயக முன்னேற்றக் கழகம் என தனிக்கட்சி தொடங்கினார். கடந்த 2009-ம் ஆண்டு அந்த கட்சியை திமுகவுடன் இணைத்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் திமுக சார்பில் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் ஆனார்.

அந்த சமயத்தில் அவரது வருமானம் மிக அதிகமாக உயர்ந்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. இதேபோல் நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு அதிக பணம் பெற்றது என பல சர்ச்சைகளில் ஜெகத்ரட்சகன் சிக்கிக்கொண்டார். இதனால் கடந்த பல ஆண்டு காலமாகவே அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதும் ஆவணங்களை கைப்பற்றுவதும் வாடிக்கையாக இருந்த வந்தது.
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி காலை ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் மருத்துவ கல்லூரி, மதுபான ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல, சென்னையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியிலும் இந்த சோதனை நடைபெற்றது.
மேலும், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் வீடு, வண்டலூரில் உள்ள தாகூர் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, கொளப்பாக்கத்தில் உள்ள பாலாஜி பாலிடெக்னிக், மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதி என மொத்தம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினமும் தமிழகம் மற்றும் புதுவையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது. தொடர்ந்து நேற்றும் இந்த சோதனை தொடர்ந்து. இதனையடுத்து இன்றும் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் வீட்டுக்கு அருகே உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகம், செங்கல்பட்டில் உள்ள மதுபான ஆலை, கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கருப்பு நிற பைகளில் கோடிக்கணக்கான மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று பூந்தமல்லியில் உள்ள சவிதா மருத்துவமனையில் சோதனை நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கான அறையில் பிரேதங்கள் வைக்கும் இடத்தில் 19 பைகளில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு கரன்சிகளும் இருந்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications