சிகரெட் விலை ரூ.10 உயர்வு.. லாபம் மொத்தமாக சரிந்ததால் ஐடிசி எடுத்த திடீர் முடிவு!
சென்னை: ஐடிசி நிறுவனம் சிகரெட் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தாண்டு ஆண்டு தொடக்கத்தில் சிகரெட் மீதான வரிகள் உயர்த்தப்பட்டபோது ஐடிசி தனது சிகரெட் விலையை உயர்த்தவில்லை. இதனால் அந்நிறுவனத்தின் லாபம் கடுமையாக சரிந்தது. இந்த சூழலில் தான் சிகரெட் விலையை ஐடிசி உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய சிகரெட் நிறுவனமாக ஐடிசி இருக்கிறது. கோதுமை மாவு முதல் நூடுல்ஸ் வரை பல்வேறு பொருட்களை ஐடிசி விற்பனை செய்தாலும் கூட இப்போதும் ஐடிசிக்கு மிக பெரிய லாபத்தை அள்ளி கொடுப்பது அதன் சிகரெட் பிஸ்னஸ் தான். சிகரெட் விற்பனையில் இருந்து கிடைக்கும் லாபம் ஐடிசிக்கு குறைந்த நிலையில், அதை ஈடு செய்யும் விதமாக சிகரெட் விலையை ஐடிசி உயர்த்தியுள்ளது.

வரிகள்
சிகரெட் மீது மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1ம் தேதி கூடுதல் வரிகளை விதித்தன. இதனால் சிகரெட்டுகளின் விலை உயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், கூடுதல் வரி முழுவதையும் உடனடியாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்தாமல், ஐடிசி நிறுவனம் படிப்படியாக விலையை உயர்த்த முடிவு செய்தது. காரணம், ஒரே நேரத்தில் அதிகமாக விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் சிகரெட் பிடிப்பதை குறைப்பார்கள் என்பதால் இந்த திட்டம்.
சிகரெட் வருவாய்
வரி உயர்வால் ஏற்பட்ட பாதிப்பு நிறுவனத்தின் பிஸ்னஸில் தெளிவாக தெரிந்தது. 2027 இரண்டாம் காலாண்டில் ஒரு முக்கியமான முரண்பாடு காணப்படுகிறது. சிகரெட் விற்பனையின் மொத்த வருவாய் 78.1 சதவீதம் உயர்ந்து ரூ.15,536 கோடியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.8,723 கோடியாக இருந்தது. ஆனால், வரிகள் போக நிறுவனத்துக்கு கிடைக்கும் நிகர வருவாய் என்பது 21 சதவீதம் சரிந்துள்ளது. சிகரெட் பிரிவின் லாபமும் 27.2 சதவீதம் குறைந்து ரூ.3,813 கோடியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் லாபம் ரூ.5,241 கோடியாக இருந்தது.
சிகரெட் விலை உயர்வு
அதாவது விற்பனை அதிகரித்திருப்பதால் மொத்த வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பகுதி வரிகளுக்கே செல்வதால் தான் நிகர வருவாய் மற்றும் லாபம் உயராமல் சரிந்துள்ளது. இதன் காரணமாகவே சிகரெட் விலையை ஐடிசி உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.125க்கு விற்கப்பட்ட 10 சிகரெட்களை கொண்ட ஐடிசி சிகரெட் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.135க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிசிக்கு மற்றொரு முக்கிய சவாலாக இருப்பது சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் சிகரெட்டுகள் தான். அதாவது மத்திய அரசு சிகரெட்கள் மீது அதிக வரி விதிக்கும் சூழலில் அதில் இருந்து தப்பிக்க, சட்டவிரோத சிகரெட்டுகள் குறைந்த விலையில் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.. மேலும், இந்தியாவில் சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் சிகரெட்கள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது. இதுபோல சட்டத்திற்கு புறம்பாக உள்ள சிகரெட்கள் விலை குறைவாக இருப்பதால் புகை பிடிப்போரில் கணிசமானோர் அதை நோக்கி செல்கிறார்கள்.
அடுத்த திட்டம்
இதற்கிடையே சிகரெட் பிஸ்னஸை மட்டுமே சார்ந்திருக்காமல் பிற துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்க ஐடிசி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆசீர்வாத் கோதுமை மாவு, யிபீ நூடுல்ஸ், சன்பீஸ்ட் பிஸ்கட் போன்ற FMCG பிரிவுகளில் கவனம் செலுத்தி அதன் விற்பனை மற்றும் வருவாயை அதிகரிக்கவும் ஐடிசி நிறுவனம் கவனம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications
