தள்ளுவண்டி கடைக்காரரின் குழந்தைகளையும் கான்வென்ட்டில் சேர்த்து அழகு பார்த்த ஜெ அன்பழகன்
சென்னை: தள்ளுவண்டிக் கடைக்காரரின் குழந்தைகளையும் கான்வென்ட்டில் சேர்த்து அழகு பார்த்தவர் ஜெ அன்பழகன் என அவரது தயாளகுணத்தையும் கல்வியில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தையும் அவரால் பயனடைந்தவர்கள் கண்ணீர் மல்க நினைவுகூர்கிறார்கள்.
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ஜெ அன்பழகன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதும், பின்னர் பின்னடைவு ஏற்படுவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.

ஜெ அன்பழகன்
எப்போதும் ஒருவர் வாழும் வாழ்க்கை அவரது இறப்பில் தெரியும் என்பார்கள். அந்த வகையில் ஜெ அன்பழகனின் தயாளு குணம் தற்போது அனைவருக்கும் தெரியவருகிறது. அவரது நினைவுகளை திமுகவினரும் பொதுமக்களும் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு கருத்தை சொல்ல வேண்டுமென்றால் பூசி மெழுகாமல் நேருக்கு நேராக பதில் அளிக்கக் கூடியவர் ஜெ அன்பழகன்.

பணக்காரர்கள்
எதற்கு அஞ்சாத நெஞ்சம் படைத்தவர். பார்ப்பதற்கு அவர் கரடு முரடாக காட்சி அளித்தாலும் அவரது உள்ளம் பலாப்பழம் போல் இனிமையானது என்கிறார்கள். வெளியுலகுக்கு தெரியாமல் பல நல்ல காரியங்களை அவர் செய்துள்ளார். அதிலும் பிள்ளைகள் கல்வி விஷயத்தில் ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்பதை விரும்பாதவர்.

தள்ளுவண்டி கடை
கல்வி உதவியை பெறுவதற்காக இவரது எம்எல்ஏ அலுவலகத்தில் மே, ஜூன் மாதங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியுமாம். அவ்வாறு வரும் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அன்பழகனே ஏற்று செலுத்துவாராம். தள்ளுவண்டி கடை வைத்திருப்போர் கல்வி உதவி தேடி அன்பழகனின் அலுவலகத்திற்கு வந்துவிட்டால் அவர்களது குழந்தைகளும் கான்வென்டில் படிக்க உதவுவார் என கண்ணீர் மல்க கூறுகிறார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு
இத்தனை நற்குணங்களை கொண்ட அன்பழகன் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருடனும் நட்புடன் பழகுபவர். போராட்டங்களில் ஜெ அன்பழகன் காட்டும் வேகத்தை யாராலும் எதிர்கொள்ளவே முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை போராடி பெற்று தருவார். தற்போது கொரோனா நோயால் போராடி தனது இறுதி மூச்சையும் போராடி போராடியே நிறுத்திக் கொண்டார்.












Click it and Unblock the Notifications