அப்பா ராதாகிருஷ்ணனை போல் சாதித்த மகன் அரவிந்த்! யுபிஎஸ்சி தேர்வில் 80ஆவது ரேங்க்! டாக்டர் டூ ஐஏஎஸ்!
சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஏஎஸ் அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் 80ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (வெளியுறவுத் துறை), ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் (வனத் துறை) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளை கொண்டது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் நிலைத் தேர்வும், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வும், இந்த ஆண்டு ஜனவரி- ஏப்ரல் வரை நேர்காணலும் நடந்தது.
முடிவுகள்
அவ்வாறு நடந்த தேர்வின் முடிவுகள் கடந்த 22 ஆம் தேதி வெளியாகின. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இந்த தேர்வு எழுதியவர்களில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு 1,129 பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது.
தமிழகம்
தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் தேசிய அளவில் 80ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
மருத்துவரான அரவிந்த்
மருத்துவரான அரவிந்த், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதி 361ஆவது இடத்தை பிடித்துள்ளார். எனினும் ஐஏஎஸ் கனவை நனவாக்க மீண்டும் தேர்வெழுதுவேன் என உறுதியாக இருந்தார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வை எழுதியிருந்த அவர் தேசிய அளவில் 80ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
கொரோனா காலம்
இதுகுறித்து அரவிந்த் பேசுகையில் கொரோனா காலத்திற்கு பிறகு ஐஏஎஸ் தேர்வுகளில் ஆர்வம் ஏற்பட்டது. மருத்துவராக பணி செய்யும் போது நோயாளிகளின் கதைகளை கேட்கும் போது இதை நல்ல நிர்வாகம் இருந்திருந்தால் தடுத்திருக்க முடியுமே என தோன்றும்.
குடிமைப் பணிகள்
அந்த கதைகளே என்னை குடிமைப் பணிகளுக்கு ஈர்த்தது. மருத்துவர் என்பதை விட அதிகாரியாக இருப்பது பலரின் தலையெழுத்தை மாற்றலாம். அப்பாவின் பணியை பார்க்கும் போது நானும் சிவில் சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.
மெடிக்கல் சயின்ஸ்
மெடிக்கல் சயின்ஸ் துறையை தேர்வு செய்து படித்ததால் யுபிஎஸ்சி தேர்வும் எனக்கு எளிதாக இருந்தது. இந்த தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிட முடியாது. தேர்வு அறிவிப்பு முதல் முடிவுகள் வெளியாகும் வரை ஓராண்டு காலம் ஆகும். அப்பா எனக்கு மன ரீதியாக ஆதரவாக இருந்தார்.
முழுமையாக படிக்க வேண்டும்
நேர்காணலுக்காக என்னிடம் நிறைய கேள்விகளைக் கேட்டிருந்தார். அதே நேரம் நாளொன்றுக்கு 4, 5, மணி நேரம் படிக்கிறோம் என்பதை தாண்டி ஒரு மணி நேரம் படித்தாலும் முழுமையாக படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் வெற்றி நிச்சயம். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தால் பலர் பயனடைந்து வருகிறார்கள். இவ்வாறு அரவிந்த் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
யார் இந்த அரவிந்த்
அரவிந்திற்கு 27 வயதாகிறது. இவர் பொது மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு இறுதியாண்டு தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டிற்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராதாகிருஷ்ணன் தான் என்ன பதவி வகித்தாலும் அதில் 4 பேருக்கு உபயோகமான பணிகளை செய்து வருகிறார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.












Click it and Unblock the Notifications