களத்தில் இறங்கும் கூட்டுறவுத்துறை ஊழியர்கள்.. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவிப்பு!
சென்னை: ஜாக்டோ ஜியோ (JACTO-GEO), ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இந்தப் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் பங்கேற்கும் என்றும் வருகிற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்றும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க மாநில தலைவர் செல்வகுமார் அறிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர்களுடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமைச்சர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்கள் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எவ்வித உறுதியான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை என்றும் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க தென் மண்டல செயற்குழு கூட்டம் உள்ளிட்ட ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வீரபாகு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில தலைவர் செல்வக்குமார் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் பங்கேற்கும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வருகிற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications