அதிமுகவில் முக்கிய பதவியை எதிர்பார்த்த ஜெமீலா! 2 ஆண்டு கால முயற்சி! லிஸ்டில் இடம்பெறாத பெயர்!
சென்னை: அதிமுகவில் மருத்துவ அணி, சிறுபான்மையினர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என பல்வேறு சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றுள்ள நிலையில் அந்த லிஸ்டில் டாக்டர் ஜெமீலாவின் பெயர் இடம்பெறவில்லை.
அமமுகவிலிருந்து விலகி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுகவில் இணைந்த டாக்டர் ஜெமீலா, அக்கட்சியின் குரலாக ஊடக விவாதங்களில் கலந்து கொள்வதோடு பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார். அமமுகவில் தகவல் தொழில் அணி மாநில நிர்வாகியாக இருந்தவர் என்பதால், அதிமுகவிலும் சார்பு அணி ஒன்றில் தனக்கு முக்கிய பதவியை அவர் எதிர்பார்த்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்ற போட்டி வந்த போது யோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்றவர் ஜெமீலா. அதுமட்டுமல்ல ஓ.பன்னீர்செல்வல்வத்துக்கு எதிராகவும் அவரை சரமாரியாக விமர்சித்தும் பேட்டிகள் கூட அளித்தார். ஆரம்பத்தில் சமூக செயற்பாட்டாளராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்த இவர், சமக, பாஜக, அமமுக என பயணித்து அதிமுகவில் இணைந்தவர்.
அமமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து அதிமுகவில் இணைந்த பலருக்கும் முக்கியப் பதவிகளை வாரி வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு உதாரணமாக திருச்சி மனோகரன், சீனிவாசன், ஒரத்தநாடு சேகர், அய்யாதுரை பாண்டியன், டாக்டர் சரவணன், என பலரை கூறலாம். ஆனால் ஜெமீலா பெயர் மட்டும் லிஸ்டில் மிஸ்ஸிங்.
அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் இன்னும் முடிவுபெறாததால் அடுத்தடுத்த லிஸ்டில் ஜெமீலா உட்பட இன்னும் பலரது பெயர்கள் இடம் பெறும் எனத் தெரிகிறது. இதனிடையே ''அதிமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்? அதிரடி திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி!'' என்ற தலைப்பில் கடந்த 21ஆம் தேதி ஒன் இந்தியா தமிழில் பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி தான் நேற்று 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் புதிய நியமனம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இனி வரும் நாட்களில் இன்னும் சில அதிரடிகளையும், புதிய அறிவிப்புகளையும் அதிமுகவில் எதிர்பார்க்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications