மொழியை காக்கவே திராணி இல்லாத விஜய்! வெற்றிக் கழகம்னு மாற்றணும்! ஜேம்ஸ் வசந்தன் தாக்கு
சென்னை: மொழியை காக்க திராணி இல்லாத நடிகர் விஜய் அந்த மொழியை பேசும் மக்களை எப்படி காப்பார் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சியின் பெயரில் வெற்றிக் கழகம் என ஒற்று வரும் என சிலர் இலக்கண பிழையை கூறி வருகிறார்கள்.

இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'தமிழக வெற்றி கழகம்'
இது அரசியல் பதிவு அல்ல. மொழிப்பதிவு.
'வெற்றி கழகம்' என்பது சரியா?
அல்லது
'வெற்றிக் கழகம்' என்பது சரியா?
எனக்கு இலக்கண அறிவு கிடையாது. ஆகையால், இதில் ஆழ்ந்த அறிவுகொண்டவர் விளக்கலாம்.
நான் அறிந்தவரை, அது 'வெற்றிக் கழகம்' என்றே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
வலிமிகும் இடங்களைக் கொஞ்சம் அலசி ஆய்ந்தபோது இது கண்ணில் பட்டது.
உடன் தொக்க தொகையில் ஒற்று ஆறாம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்க தொகை அமையாது. மற்ற 2, 3, 4, 5, 7 வேற்றுமைகளில் உருபும் பயனும் உடன் தொக்க தொகைகளில் வலி மிகும்.
(அ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலி மிகும்.
எ-டு.
கஞ்சி + தொட்டி = கஞ்சித் தொட்டி (கஞ்சியை ஊற்றி வைத்திருக்கும் தொட்டி.)
வெற்றி + திருமகன் = வெற்றித் திருமகன் (வெற்றியைப் பெற்ற திருமகன்.)
'வெற்றிக் கழகம்' என்பது வெற்றியின் கழகம், வெற்றி பெறும் கழகம், வெற்றி அடையும் கழகம் என்கிற பொருளில்தானே இடப்பட்டிருக்கிறது. அப்படியெனில், வலி மிகுந்துதானே ஆகவேண்டும்?
தேர்ந்தவர் உறுதிசெய்யலாம்! என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய்யின் கட்சி பெயரில் வெற்றி கழகத்தில் ஒற்று பிழை உள்ளது என தமிழ் அறிஞர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தாலும் வெற்றிக் கழகம் என க் வைத்து மாற்றித்தான் பதிவு செய்தாக வேண்டும்.
மொழியில் பிழை என சொல்லும் போதே அதை சரி செய்து மொழியை காக்க திராணி இல்லாதவர், எப்படி அந்த மொழியை பேசும் இனத்தை காக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. விஜய் இதை மாற்றித்தான் ஆக வேண்டும். ஒரு தமிழனா இதை முழுக்க முழுக்க உரத்த குரலில் எதிர்ப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications