விஜய் அரசியல்.. ஜேம்ஸ் வசந்தன் இப்படி சொல்லிட்டாரே! உக்ரைன் பிரதமருடன் ஒப்பீடு! தொழிலுக்கே சிக்கலாம்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலுக்கு வரலாம் என்ற பேச்சு இருந்து வருகிறது. தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கி நற்பணிகளில் ஈடுபட வைத்தது, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட பச்சைக் கொடி காட்டியது, தொகுதி வாரியாக மாணவர்களுக்கு பரிசு வழங்கியது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது என அவரது நடவடிக்கை அரசியலுக்கான சிக்னலாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அரசியல் கட்சித் தொடர்பாக டெல்லிக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் சென்றதாகவும், விரைவில் கட்சி பெயரை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விஜய் அரசியல் வருகை தொடர்பாக அரசியல்வாதிகள், திரை கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் இது பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "தமிழக அரசியலில் இன்னொரு புதுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்தது கூட இல்லை, நடிகர் விஜய் தீவிர அரசியலுக்குள் இறங்குவார் என்று. வழக்கமான "நடிகனுக்கு என்ன தெரியும் அரசியலைப் பற்றி?" என்கிற விமர்சனங்கள் வலம்வரத் தொடங்கி விட்டன. மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற தூண்டல் பல்வேறு துறைகளில் இருக்கிற பலருக்கும் ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அது வந்துவிட்டது இவருக்கு. அவ்வளவுதான்!
அந்தத் துளைப்பு வந்துவிட்ட விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது. நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்க்கிற, உச்சத்திலுள்ள ஒரு நடிகர் தன் தொழிலுக்கே ஊறுவிளைவிக்கக்கூடிய ஒரு செயலில் அவ்வளவு எளிதாக இறங்கிவிடுவாரா? எவ்வளவு எண்ணங்கள் ஓடியிருக்கும்? அதற்குப் பின்பும் அவர் இதில் இறங்குகிறார் என்றால், தன் தொழிலைத் தாண்டி இந்தப் பயணம் இவருக்கு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால் அந்த உந்துதல் உண்மைதானே? இது என் புரிதல்.
வல்லரசு நாடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்த்து நின்று ஓராண்டுக்கும் மேலாகக் கடுமையாகப் போரிட்டு வரும் குட்டி நாடான உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒரு காமெடி நடிகர்தானே! நடிகர், தயாரிப்பாளர் என்று இருந்தவர் திடீரென ஒரு நாள் தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று அறிவித்தவரைத்தானே அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்கள் தீர்ப்பு மிகச்சரி என்று தொடர்ந்து தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறாரே! புடினுக்கே சிம்மசொப்பனமாக விளங்குகிறாரே!நோக்கம் சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. பார்க்கலாம்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications