சிஎஸ்கே டிக்கெட் விலை பரவால போலயே.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலை என்ன தெரியுமா?
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள பிரம்மாண்ட புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடக்க உள்ள ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் விலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.2,141ஆகவும், அதிகபட்சம் டிக்கெட் விலையாக ரூ.6,467ம் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான விளம்பரப் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக இயங்கி வருகிறது. ஏற்கனவே ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. மலேசியாவில் உள்ள பிரம்மாண்ட புக்கிட் ஜலீல் மைதானத்தில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த மைதானத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சியை காண முடியும். இதனால் இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய இசை வெளியீட்டு விழாவாக ஜனநாயகன் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுடன் இணைத்து தளபதி கச்சேரி என்ற நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் விஜய் நடித்த பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை அரங்கேற்றப்பட உள்ளன. இதற்காக விஜய் ஏற்கனவே மலேசியா பறந்துவிட்டார். அவருடன் படக்குழு மற்றும் பிரபலங்கள் பலரும் மலேசியா சென்றுவிட்டனர்.
அதேபோல் பிரபல இயக்குநர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் மலேசியாவிலும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளும் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. மலேசியாவிலும் விஜய்க்கு இவ்வளவு மாஸ் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் விலை குறித்த தகவல் வெளி வந்துள்ளது. அதன்படி இந்திய மதிப்பில் குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.2,141ஆகவும், அதிகபட்சமாக டிக்கெட் விலையாக ரூ.6,467ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மிடில் கிளாஸ் டிக்கெட்டாக ரூ.4,304ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பாடகர்கள் விஜய் யேசுதாஸ், ஆண்ட்ரியா, க்ரிஷ், ஹரீஷ் ராகவேந்திரா, எஸ்பிபி சரண் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். இதனால் விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஒரு கான்சர்ட் நிகழ்ச்சியை போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications