2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை
சென்னை: பெரும் எதிர்பார்ப்புடன் விஜய் ரசிகர்கள் காத்திருந்த ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்காகி இருக்கிறது. முதலில் சில சில காட்சிகள் லீக்கானது. பின்னர் மொத்த படமே லீக்காகி உள்ளது.
தமிழகமே தேர்தல் ஜுரத்தில் தகித்துக்கொண்டிருக்க, விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண லீக் என்றால் பரவாயில்லை, ஆனால் கசிந்திருக்கும் விதம்தான் ஏகப்பட்ட 'சதி' தியரிகளை முளைக்க வைத்திருக்கிறது.

எடிட்டிங் டேபிள் டூ ஆன்லைன்!
வெளியாகியுள்ள இரண்டு வெர்ஷன்கள்தான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளன. ஒன்று, பக்கா எடிட்டிங் டேபிளில் இருக்கும் 'ரா' ஃபுட்டேஜ் போன்ற ஒரு டிஜிட்டல் எச்டி வெர்ஷன். மற்றொன்று, ஒரு விஐபி திரையிடலில் (Private Show) இருந்து எடுக்கப்பட்டது போன்ற வெர்ஷன். "சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்ட நிலையில், தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு துல்லியமான ஒரு காப்பி எப்படி வெளியே வந்தது?" என்பதே சினிமா ஆர்வலர்களின் மர்மக் கேள்வி.
அதுவும் சென்சார் போர்ட் சென்சார் செய்யாத காட்சிகள் லீக்காகி உள்ளது. இதனால் இந்த லீக் இன்சைட்ர் ஜாப்பாக இருக்குமோ என்ற கேள்வி உள்ளது.
டிவிகே 'மைலேஜ்'... இது திட்டமிட்ட 'மூவ்' ஆ?
படத்தில் ஆங்காங்கே தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கொள்கைகளும், விஜய் பேசும் வசனங்களும் நிஜ அரசியல் மேடைப் பேச்சுகளை விட காரசாரமாக இருக்கிறதாம். விஜய் TVK என்று பச்சை குத்தி இருக்கும் காட்சிகள் கூட வருகின்றன. "கட்சி ஆரம்பிச்சு இப்போதான் முழுநேர அரசியல்ல இறங்கியிருக்காரு... இந்த நேரத்துல படம் லீக் ஆகி, அதில் இருக்குற அரசியல் வசனங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மாறுவது அவருக்கு பெரிய அரசியல் மைலேஜ் தரும்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதையேதான் 'உடன்பிறப்புகளும்' கையில் எடுத்துள்ளனர். "சென்சார் பிரச்சனையைச் சொல்லி படம் தள்ளிப்போனதால், அனுதாபத்தை சம்பாதிக்கவும், தேர்தல் நேரத்தில் மக்களிடம் ரீச் கிடைக்கவும் டிவி கே தரப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்" என்பது அறிவாலய தரப்பின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
"பயந்துட்டாங்க..." - பதிலடி தரும் டிவி கே!
இதற்கு டிவி கே தொண்டர்கள் சும்மா இருப்பார்களா? "எங்கள் தலைவரின் எழுச்சியைக் கண்டு பயந்து, திட்டமிட்டு இந்தப் படத்தை முடக்கப் பார்த்தார்கள். அது அவரின் கடைசி படம். அதை கூட தியேட்டரில் ரிலீஸ் ஆக விடவில்லை. இப்போது மக்களிடம் படம் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தரம் குறைந்த வேலையை ஆளுங்கட்சி தரப்புதான் செய்திருக்கிறது" என அவர்கள் ஆவேசப்படுகிறார்கள்.
கிளைமாக்ஸ் எங்கே?
சினிமா பைரஸி என்பது ஒருபுறம் குற்றமாக இருந்தாலும், 'ஜனநாயகன்' விவகாரத்தைப் பொறுத்தவரை அது ஒரு 'பிரி-எலெக்ஷன் கேம்பெயின்' போலவே மாறிவிட்டது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், லீக் ஆன காட்சிகளில் இருக்கும் அரசியல் குறியீடுகள் ஏற்கனவே வாக்காளர்களின் மொபைல்களுக்குச் சென்றுவிட்டன.
பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்கிறதோ இல்லையோ, 'பாலிடிக்ஸ்' மேடையில் இந்தப் படம் விஜய்க்கு ஒரு 'ஸ்ட்ராங்' என்ட்ரியைக் கொடுத்துவிட்டது என்னவோ உண்மை!
தேர்தல் நேரத்தில் இந்த படம் நல்ல பிரச்சாரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் வெளியாகும் இதுபோன்ற 'சினிமா' அரசியல், வாக்குகளாக மாறுமா அல்லது வெறும் 'வைரல்' செய்தியாக முடியுமா என்பதை இன்னும் சில வாரங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications