உயிருக்கு போராடும் 25 ஆண்டுகால ஆயுள் சிறைவாசி! பரோல் கோரி முதல்வருக்கு ஜவாஹிருல்லா கடிதம்!
சென்னை: உயிருக்கு போராடும் சிறைவாசி என்.எஸ். ஹக்கீமிற்கு நீண்டநாள் பரோல் வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா அனுப்பியுள்ள கடிதத்தில்
சென்னை, புழல் சிறையில் 25 ஆண்டுகளாக உள்ள என்.எஸ்.ஹக்கீம் என்ற ஆயுள் தண்டனை சிறைவாசி உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே தற்போது அவருக்கு மூளை நரம்பில் கட்டி உள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனவும், அக்கட்டியை அகற்றினாலும், அவரது கை அல்லது கால்கள் செயலிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, முதலமைச்சர் அவர்கள், 25 ஆண்டுகளாக சிறையில்வாடி கடுமையாக நோய்வாய்பட்டிருக்கும் மேற்படி சிறைவாசியின் உடல்நிலையை கருதி சிறைவாசி என்.எஸ்.ஹக்கீம் விரைந்து முன்விடுதலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. மநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக சிறைச்சாலைகளில் என்.எஸ்.ஹக்கீம் உள்பட முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பலரும் 20 ஆண்டுகளை கடந்து உடல் ரீதியான பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் விடுதலையை எதிர்பார்ப்பதாகவும் 7 தமிழர்கள் விடுதலையை சாத்தியமாக்கியது போன்று, நீண்டகால முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications