இதெல்லாம் ரொம்ப தப்பு.. முக ஸ்டாலினின் பாதுகாப்பு குறைப்பு! அரசியல் காழ்ப்புணர்ச்சி.. பறந்த கண்டனம்!
சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சர்மான மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பைக் குறைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியாக இருக்கக் கூடாது எனவும், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது தொடர்பான முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
நாகையில் பேசிய அவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு முன்னாள் முதலமைச்சர், முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பை குறைப்பது என்பது சாதாரண நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்பட முடியாது.
பாதுகாப்பு என்பது அரசியல் விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக் கூடாது. ஒருவரின் அரசியல் நிலைப்பாடு அல்லது அவர் வகிக்கும் அரசியல் பாத்திரத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்வது ஜனநாயக மரபுகளுக்கு உகந்ததல்ல. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த முறையான மதிப்பீட்டின் அடிப்படையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அறிவியல் ரீதியான அச்சுறுத்தல் மதிப்பீடு எதுவும் இல்லாமல் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருந்தால், அது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு தொடர்பான முடிவில் அரசியல் தலையீட்டுக்கு எந்தவித இடமும் இருக்கக்கூடாது. மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கான காரணங்களை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக மக்களுக்கு விளக்க வேண்டும்.
பாதுகாப்பு குறைப்பு அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டதா? அதற்கான உளவுத்துறை மதிப்பீடு என்ன? பாதுகாப்பு குறைப்பு தொடர்பாக எந்த அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அரசியல் எதிரிகளை எதிர்கொள்வது என்பது ஜனநாயகத்தில் அரசியல் விவாதத்தின் மூலமாக இருக்க வேண்டும்; அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக இருக்கக்கூடாது.
எனவே, மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது தொடர்பான முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்த விவகாரத்தில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பதை அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு அரசியல் தலைவரின் பாதுகாப்பு என்பது அவரது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல; அது ஜனநாயகத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சகிப்புத்தன்மையுடன் தொடர்புடைய பொதுப்பிரச்சினையாகும்." என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
