சுவாமிமலை முருகன் கோவிலுக்காக குரல் கொடுத்த ஜவாஹிருல்லா! சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தந்த உறுதி!
சென்னை: முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதன் கோவிலுக்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜவாஜிருல்லாவின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில் இந்தாண்டே அது நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அளித்துள்ளார்.
சுவாமிமலை முருகன் கோவிலுக்காக இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்து கோரிக்கை வைத்த நிகழ்வு சட்டசவையில் இருந்த மற்ற உறுப்பினர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் வயதான பக்தர்கள் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சிரமப்படுவதாகவும் அங்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் உறுதி
அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுவாமிமலை முருகன் கோவிலில் ரோப் கார் அமைக்க சாத்தியக் கூறுகள் இருந்தால் இந்தாண்டே அதுகுறித்து பரிசீலித்து சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்த நிகழ்வை பேரவையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கவனித்து பார்த்தனர்.

பாஜக உறுப்பினர்கள்
இதனிடையே சுவாமிமலை முருகன் கோவிலுக்காக சட்டசபையில் ஜவாஹிருல்லா முன்வைத்த கோரிக்கையை வானதி சீனிவாசன் உட்பட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் உன்னிப்பாக கவனித்தனர். முருகனின் ஆறுபடை வீடுகளை மையமாக வைத்து தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

100 கேள்விகள்
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 100 கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ள தகவலை சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் வெளியிட்டார். திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குள் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 100 கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் பதிலளித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications