RTI Act: வெளிப்படைத்தன்மை என்பது மக்களின் ஜனநாயக உரிமை! ஜவாஹிருல்லா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என தவெக அரசு புதிதாக பிறப்பித்த உத்தரவை மனிதநேய மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான வழக்குகளில் ஆர்டிஐ மூலம் சில விவரங்களை கேட்டு பெற்று வந்தனர். இதனால் தேவையற்ற குழப்பங்களும் சிக்கல்களும் வருவதை தவிர்க்க தமிழக அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.

jawahirulla

அதன்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து பொதுத் துறையின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து தவெக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் புதிய அரசாணை கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. எனவே அன்றைய தேதியில் இருந்து சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தால் பதில் கிடைக்காது. இனி கேள்வியும் எழுப்ப முடியாது.

அதன்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினரின் போராட்டங்கள், லாக்கப் மரணங்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கைகளையும் பெற முடியாது.

இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில், சட்டம்-ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படை நோக்கமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதாகும். அதேநேரத்தில், தேசிய பாதுகாப்பு, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட தகவல்களுக்கு சட்டத்தின் பிரிவு 8 ஏற்கெனவே விலக்குகளை வழங்குகிறது.

எனவே, "சட்டம்-ஒழுங்கு" என்ற பரந்த சொல்லைக் காரணம் காட்டி காவல்துறை தொடர்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்குவது நியாயமானதல்ல. தேவையான இடங்களில் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட விலக்குகளைப் பயன்படுத்த முடியும்.

காவல்துறையின் செயல்பாடுகள் மக்களின் உயிர், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எனவே, பொதுநலன் சார்ந்த தகவல்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். குறிப்பாக, மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகப் பொறுப்புணர்வுக்கு முக்கியமானது.

மேலும், ஆர்டிஐ சட்டத்தின் வரம்பைக் குறைக்கும் இந்த நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். தகவல் பெறும் உரிமையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா, தமிழக அரசின் இந்த உத்தரவை ஏற்கிறதா என்பதை அக்கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

வெளிப்படைத்தன்மை என்பது அரசின் சலுகை அல்ல; அது மக்களின் ஜனநாயக உரிமை. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். அது போல் இந்த உத்தரவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்பி சு.வெங்கடேசன் கூறியிருப்பதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத் துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காவல் மரணங்கள் நடக்கின்றன.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுகிறது. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல் துறை.

நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டம் & ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது தமிழ்நாட்டை "போலீஸ் ஸ்டேட்டாக" மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி. இந்த உத்தரவை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+