வெளிநாட்டில் சிகிச்சை பெற அழைத்தேன்.. ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.. சசிகலா வாக்குமூலம்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்ட பிறகு நான் எவ்வளவோ வேண்டுகோள் வைத்தும் கூட அவர் வெளிநாட்டில் மேல் சிகிச்சை பெற ஒப்புக் கொள்ளவில்லை என சசிகலா பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த பிரமாண வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அக்கா தனி அறைக்கு மாற்றப்பட்ட பிறகு நான் எவ்வளவோ வேண்டுகோள் வைத்தும் கூட அக்கா வெளிநாட்டுக்கு சென்று மேல் சிகிச்சை பெற்றுக் கொள்ள ஒத்துக் கொள்ளவில்லை. நான் வெளிநாடு போகலாம் என அக்காவிடம் கூறிய போதெல்லாம், எனக்கு சரியாகிவிட்டது.

உடற்பயிற்சி
நடக்க, உடற்பயிறசி செய்ய ஆரம்பித்துவிட்டேன் அதெல்லாம் தேவையில்லை என்று கூறி பிடிவாதமாக மறுத்துவிட்டார். அந்த காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தில் அஇஅதிமுகவினர் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிராக தமிழக நலனை கருத்தில் கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என நவம்பர் 2016 இரண்டாம் வாரத்தில் அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட ஒரு குறிப்பு எழுதினார். அந்த குறிப்பும் அவர் கையில் மருத்துவமனையில் எழுதிய சில குறிப்புகளும் அக்காவின் அறையில் உ ள்ளது.

அக்காவின் அறிவுரை
அக்காவின் அறிவுரை படியே நாடாளுமன்றத்தில் மேற்படி விஷயத்தில் அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி போயஸ் தோட்டத்திற்கு போக 29.12.2016 ஆம் தேதியை நல்ல நாள் என அக்கா முடிவெடுத்தார். மருத்துவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர். நானும் வாரம் ஒரு முறை போயஸ் தோட்ட வீட்டுக்கு போய் அக்காவின் விருப்பப்படி வீட்டு பூஜையறையில் விளக்கு போட்டு பூஜை செய்து வழிபட்டு வந்தேன்.

போயஸ் தோட்டம்
அக்கா போயஸ் தோட்ட வீட்டுக்கு திரும்பிய பிறகு வீட்டில் படியேறாமல் இருக்க போதுமான அளவில் பெரிய லிப்ட் வசதிக்கு ஏற்பாடு செய்தேன். அக்கா மருத்துவ சிகிச்சைக்கு பிறரு ஓய்வு எடுக்க உரிய வசதிகளையும் வீட்டில் செய்து வைத்தேன். மருத்துவமனையில் அக்காவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான உடைகள் விசேஷமாக தைக்கப்பட்டன. அக்காவின் தனி பாதுகாப்பு பிரிவு உதவி அதிகாரி அசோகன், அக்கா மருத்துவமனையில் உட்கார்ந்து பிசியோதெரபி பயிற்சி செய்ய, பெரிய மேஜை மற்றும் பெரிய இருக்கை செய்ய அளவு எடுத்து புதிதாக இருக்கை செய்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.

ராம மோகனராவ்
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் அவ்வப்போது அக்காவின் அறை கதவை திறந்து அக்காவக்கு வணக்கம் சொல்வார். அக்காவும் புன்முறுவலோடு அவரின் வணக்கத்தை ஏற்றுக் கொள்வார். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்து அக்கா பலமுறை பேசியுள்ளார். போயஸ் தோட்டத்தில் பணி புரிந்தவர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் அக்காவை தனி அறையிலிருந்த கண்ணாடி வழியாக பார்த்துள்ளார்கள். இவ்வாறு சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications