சர்க்கரை நோயாளி ஜெயலலிதாவுக்கு சாக்லேட், இனிப்புகள் தாராளம்! ஸ்டிரிக்ட் இல்லாத அப்பல்லோ மருத்துவமனை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஒரு ஸ்பூன் உணவு மட்டுமே எடுத்துக் கொண்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் உணவு முறை என்ற தலைப்பில் ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த முதல்வருக்கு வெளி உணவு எதுவும் வழங்கப்படாமல் மருத்துவமனை உணவு மட்டுமே வழங்கப்பட்டது.
அடிக்கடி மெனுவை மாற்றிக் கொண்டிருந்தார். 28.9.2016 ஆம் ஆண்டு முதல் மயக்க நிலையில் இருந்ததாகவும் 7.10.16 ஆம் ஆண்டு முதல் வென்டிலேட்டருடன் இணைக்கப்பட்டும், 15.10.2016 முதல் மயக்கநிலை குறைந்து உணவை தானாகவே வாய்வழியாக எடுத்துக் கொண்டார். கேக் மற்றும் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்கவில்லை.

உயர்தர சாக்லேட்
உயர்தர சாக்லேட் நிறத்தினாலான ஐஸ்கிரீம்களையும் எடுத்துக் கொண்டு மிகச் சிறு அளவிலான அரிசி உணவையும் எடுத்துக் கொண்டார். சில சமயங்களில் பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நிறைய கேக் மற்றும் இனிப்பு வகைகளை அவர் எடுத்துக் கொண்டார். ஜெயலலிதா ஒரு ஸ்பூன் சாதத்திற்கு மேல் சாப்பிடுவதில்லை.

செவிலியர்கள்
செவிலியர்கள் கட்டாயப்படுத்தினால் மட்டுமே இரண்டாவது ஸ்பூன் சாப்பிடுவார். ஜெயலலிதா சர்க்கரை இல்லாத மில்க் ஷேக்கை வழக்கமாக எடுத்துக் கொண்டார். தீபாவளியன்றும் இடைத்தேர்தலில் அவருடைய கட்சி வென்ற பிறகு மறுமுறையுமாக இரண்டு முறை இனிப்புகள் வழங்கப்பட்டன. அவருக்கான உணவை தயாரிக்க அவரது சமையல்காரரை அனுமதித்து அப்பல்லோவின் சமையல்காரர் அதைக் கண்காணித்தார்.

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை
ஒரு முறை அல்வா எடுத்து கொண்டார். ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தால் அந்த மருத்துவமனையின் மற்ற நோயாளிகளை போல் அவரும் ஒரு சாதாரண நோயாளியாக இருந்திருப்பார். மறைந்த முதல்வரை விட செவிலியர்கள் அதிக அதிகாரம் செலுத்தியிருப்பார்கள் எனக் கூறியதை இந்த ஆணையம் நினைவுகூறுகிறது. ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்ததால் உணவுக் கட்டுப்பாட்டை உணவியல் நிபுணரால் வலியுறுத்த முடியவில்லை.

உடல்நிலை மோசம்
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உணவு அல்லது ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்ததால் அவருடைய உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications