செங்கோட்டையன் வரலையாமே? ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டிய எடப்பாடி பழனிசாமி.. கோலாகலம்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அதிமுக தலைமை அலுவலகத்தில், 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

மகத்தான சாதனைகள்
அதேபோல, வீராணம் திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், போன்ற தனித்துவமான திட்டங்களிலும் உச்சம் தொட்டார் ஜெயலலிதா.. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து 9-வது அட்டவணையில் சேர்த்தது போன்றவையும், இவரது மகத்தான சாதனையாகும்..
இன்று ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழாவாகும்.. அதிமுகவினர் இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.. இன்று காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாலை அணிவித்து மரியாதை
இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. மேலும், 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்க்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானம் உள்ளிட்டவையும் துவக்கி வைக்கப்பட்டன.. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
செங்கோட்டையன் எங்கே
ஆனால், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை ராயப்பேட்டை ஆபீசுக்கு வரவில்லை.. மூத்த தலைவர், ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்காதது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications