“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்!
சென்னை: இந்திய அரசியலில் ஒரு பக்குவமான அரசியல்வாதியாக ப.சிதம்பரம் தனது இருப்பை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். திமுக, காங்கிரஸ் இடையே இடியாப்ப சிக்கல்போல இழுத்துக் கொண்டிருந்த கூட்டணி பிரச்சனையைச் சுமுகமாக முடித்து வைத்துள்ளார் ப. சிதம்பரம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு பவர்ஃபுல் காங் மூத்த தலைவர் இருக்கும்போது, அவரைவிட்டு வேறு நபர்களை வைத்து ஏன் காங். தலைமை கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் எனச் சிலர் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
அதற்குக் காரணம், காங்கிரஸ் தலைமை அல்ல. எந்தப் பிரச்சனையிலும் தலைவைக்காமல் 'டீசெண்ட் பாலிடிஷியன்' ஆகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம்தான். முன்னாள் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் போல ஒரு மேல் தட்டு அரசியலைச் செய்து வருபவர் சிதம்பரம். அவர் சென்னையில்தான் இருப்பார். ஆனால், தினமும் வழக்கமான காங்கிரஸ் தலைவர்களைப் போல சத்தியமூர்த்தி பவன் பக்கம் காலை எழுந்ததும் காரை எடுத்துக் கொண்டு வந்துபோக மாட்டார்.

ப.சியின் 'Dream Budget'
மழைக் காலத்தில் இடி இடிப்பதைப்போல் பட்ஜெட் காலத்தில் மட்டும் தன் கருத்தைத் தரம் தாழ்ந்துவிடாத மொழியில் விளக்கிவிட்டுப் போய்விடுவார். அவர் நாடாளுமன்ற அவையில் பேசினார், அது பலரது கவனத்தைக் கட்டாயம் கவரும்படி இருக்கும். டெல்லியில் ஒரு 'வேட்டிக் கட்டிய தமிழன்' என்று பெயரைச் சம்பாதித்து வைத்தவர். ஆனால், அவருக்கு முன்னால் காமராஜ் போன்ற வேட்டிக் கட்டிய தமிழர்கள் டெல்லியில் கொடி கட்டி பறந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
இன்றைக்கு திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் ப.சிதம்பரம் கடந்த காலங்களில் திமுகவுக்கு எதிரான மனநிலையிலும் இருந்தவர். 'சிவகங்கை சின்ன பையன்' என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இவரைச் சுட்டிக் காட்டிச் சொன்ன சொல் பல ஆண்டுகள் ஆகியும் மறையாமல் இருக்கிறது.
சிதம்பரத்தின் திறமையை மிகத் தெளிவாக நாடு உணர்ந்தது மன்மோகன் ஆட்சிக்காலத்தில்தான். 1997 இவர் முன்மொழிந்த 'Dream Budget' பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. தனி நபர் வருமானத்தின் மீது போடப்படும் வரியை குறைத்து வரி வசூலை வேகப்படுத்தியதால் நாடு பலனடைந்தது என்பார்கள். இதனால் 9% மேலாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற்றது.
90 தொடங்கி நடைபெற்று வந்த ஜெயலலிதா ஆட்சியில் ஊழல்கள் மலிந்தன. அவரது ஆடம்பர வாழ்க்கை பத்திரிகை செய்திகள் மூலம் மக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்தது.
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் மனநிலைக்கு மாறாக நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி சேர முடிவு எடுத்ததால், மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உண்டானது. சத்திய மூர்த்தி பவனில் வைக்கப்பட்ட நரசிம்ம ராவ் கட் அவுட்டிற்கு காங்கிரஸ் தொண்டர்கள் செருப்பு மாலை போட்டுக் கண்டித்து கட்சியை விட்டு சாரை சாரையாக வெளியேறினர். பெரிய கொந்தளிப்பு அரசியல் களத்தில் நடந்தது.
ஜெ - சிதம்பரம் மோதல்
அந்த நேரத்தில் மூப்பனார் தொடங்கிய த.மா.காவில் இரண்டாம் கட்டத் தலைவராக ப.சிதம்பரம் இருந்தார். ஆகவே 1996 தேர்தல் சமயத்தில் சிதம்பரத்தை ஜெயலலிதா தரக்குறைவாக விமர்சித்தார். "சிதம்பரம் கீழ்த்தரமான அரசியல்வாதி. ஒரு சாதாரண வக்கீல். விந்தையான மனிதர்" என்றார். அந்தக் காலத்திலிருந்தே ஜெயலலிதாவின் எதிரிகள் பட்டியலில் சிதம்பரம் இருந்தார்.
1996இல் மூப்பனார் திமுகவுடன் அமைத்த கூட்டணிக்கு ரஜினிகாந்த்தின் ஆதரவு இருந்தது. அவர் தொலைக்காட்சியில் தோன்றி, 'நாட்டை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' எனச் சொன்ன வார்த்தை வாக்காளர்கள் உள்ளத்தைத் தாக்கியது. ஆகவே, ரஜினியின் 'அண்ணாமலை' படத்தில் பால்காரனாக வலம் வந்த சைக்கிள் சின்னத்தை த.மா.கா பெற்றுத் தேர்தலில் களம் கண்டது. ஊர் சுவர்களில் ரஜினியின் அண்ணாமலை போஸ்டர் ஒட்டப்பட்டது. ஆகவே திமுக வென்றது.
ஆட்சிக்கு வந்த பின் சுமுகமாகச் சென்றது. பின்னர் மூப்பனார் அதிமுக பக்கம் சாயத் தொடங்கினார். ஜெயலலிதா எதிர்ப்பில் உருவான ஒரு கட்சி அவரது பக்கம் சாய்வதைச் சிதம்பரம் விரும்பவில்லை. 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' எனச் சிதம்பரம் பற்ற வைத்த திரி பற்றி எரிந்தது. சிதம்பரத்தை திமுகவினர் கண்டித்தனர். இடையில் நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்களில் அதிமுகவை ஆதரித்தார் மூப்பனார்.
திமுக தலைவர் பவள விழா மெரினாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பரிசு வழங்கிய மூப்பனார், கூட்டணியை உறுதிசெய்யாமலே மௌனமாகக் கடந்தார். அந்நிலையில்தான் 2001இல் திமுகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார் சிதம்பரம்.
ஜனநாயக பேரவையைத் தொடங்கினார். "யார்தான் ஊழல் செய்யவில்லை என்று ஊழல்வாதிகளை நியாயப்படுத்தும் போக்கு வெறுக்க வேண்டியது. ஊழல் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். ஒழுக்கமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியிலிருந்தால் நல்லாட்சிக்கு உத்தரவாதம்" என்றார்.
"என்னைப் பழி வாங்குகிறார்கள் என்று தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசுகிறாரே தவிர, தமிழ்நாட்டு மக்கள் எதிர்காலத்தைப் பற்றியோ அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றியோ ஜெயலலிதா பேசுவதே இல்லை. பல்வேறு அம்சங்களில் முன்னேறி முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது. அதற்குக் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வைதான் காரணம்" என்று 2001 தேர்தல் களத்தில் திமுக பக்கம் நின்றார்.
ஆனால், தேர்தல் முடிந்ததும் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தனது பேரவை இணைக்கப்படும் என்றும் ஒரு புதிய பாதையைப் போட்டார் சிதம்பரம். நரசிம்ம ராவை மேடையில் வைத்துக் கொண்டே ராஜீவ் காந்தி படுகொலையில் மூப்பனாருக்குத் தொடர்பு உள்ளது. ஆகவே அவரை விசாரிக்க வேண்டும் என்றவர் ஜெயலலிதா தான். 1990களுக்குப் பின் அவர் ஆட்சிக்கு வந்தது முதலே சிதம்பரத்தோடு அவருக்கு ஒரு பகை நிலவியது. அதற்குக் காரணம், அவர் தன் மீதான ஊழல் வழக்குகளுக்கு எதிராக டெல்லியில் செயல்பட்டார் என ஜெயலலிதா நம்பினார்.
ஜெயலலிதா ஒரு சாதாரண வக்கீல் எனச் சிதம்பரத்தைச் சொன்னதற்கு மாறாக, "ஜெயித்தால் அமைச்சர்; இல்லை எனில் கறுப்பு கோட் போட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்குப் போய்விடுவார் சிதம்பரம்" என ஒரு காலத்தில் பெருமையாகப் பேசியவர் ஜி.கே.மூப்பனார்.
2001 தேர்தலில் ஜெயலலிதாவுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றால் யார் முதல்வர் என்பதில் சிதம்பரத்திற்குக் குழப்பம் இருந்தது. ஜெயலலிதாவோ மூப்பனாருடன் கூட்டணிக்கு ஆசைப்பட்டார். அப்போது உடல்நிலை சரியாக இல்லாததால், அவர் கட்சி பிரதிநிதியாக இருந்த ஜெயந்தி நடராஜன் உட்பட அடுத்தகட்டத் தலைவர்கள் ஜெ பக்கம் அணி மாற தயாராக இருந்தனர்.
சிதம்பரத்தை சந்திப்பதை மூப்பனார் தாமதித்தார். சிலர் முட்டுக்கட்டை போடுவதாக ப.சி கூறினார். சிலர் விலைபோய்விட்டார்கள் என அவர் தெரிவித்தார்.
அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கமுடியுமா? ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பாட்டால் ஆட்சி யார் தலைமை தாங்குவது எனப் பல குழப்பங்கள் நிலவின. அதை அறிக்கையில் சேர்க்கச் சொன்னார் ப.சிதம்பரம். அது ஜெவின் கோபத்தை அதிகப்படுத்தும் என அமைதியாக விட்டுவிட்டார் மூப்பனார்.
மூப்பனார் மீது விமர்சனம்
இதனால் "த.மா.காவில் தலைவர் இருக்கிறார். ஆனால் தலைமை இல்லை" எனப் பேசினார் சிதம்பரம். அதற்குள் ஆயிரம் ரகசியம் மறைந்திருந்தது. ஒருவேளை தேர்தல் முடிவுக்குப் பின் த.மா.காவை காங்கிரஸ் உடன் மூப்பனார் இணைந்துவிடுவார் என ஊகம் பரவியது. இறுதியில் மூப்பனார் மகன் அதையே செய்தார்.
ஒரு காலத்தில் பாஜகவில் ப.சி. சேர்ந்துவிடுவார் எனப் பேச்சு நிலவியது. இறுதியில் கிட்டத்தட்ட பாஜகவில் ஒரு கிளையாகவே ஜி.கே.வாசன் மாறிவிட்டார். சிதம்பரத்தை அரசியல் ரீதியாக பாஜக முடக்க வழக்குகளை வேகப்படுத்தியது. ஐ.என்.எக்ஸ். மீடியா, ஏர்செல் மேக்சி ஆகிய வழக்குகளில் அவரும் அவரது மகனும் சிக்கியுள்ளனர். சிதம்பரத்தை பாஜக அரசு கைது செய்தும் பார்த்தது. படியவில்லை சிதம்பரம். அவரைப் போல் அவரது மகனும் வழக்கில் மிகத் தைரியமாக எதிர்த்து நின்றனர்.
ஆக, ஆரம்பக் காலத்தில் இருதே அவர் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தார் என்பதைவிட, திமுகவுக்கு சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார். சிதம்பரம் போன்ற சீனியர் தலைவர்களை தன் இஷ்டத்திற்கு வளைக்க முடியாது என நினைத்தே ராகுல் அவரை தூரத்தில் வைத்திருந்தார். வெள்ளம் தலைக்கு மேல் போகிறது என்பதை உணர்ந்த காங் மேலிடம் சிதம்பரத்தைக் கூட்டணி பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவந்தது.
ஒரு வகையில் இது ராகுலுக்குப் பெரிய அடி. அவர் செய்து முடிக்காத வேலையைச் சுமுகமாகச் சிதம்பரம் செய்து காட்டிவிட்டார். முன்பைவிட ஒரு சில தொகுதிகள் கூடுதலாகவும் கிடைத்துவிட்டது. மு.கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை ஒரு நற்பெயர் ப.சி.க்கு உள்ளது. ஆனால், அவரது மகனோ திமுகவையும் ராகுலையும் கூட்டணிக்குள் இருந்துகொண்டே கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு மாநில அரசியலில் இடம் இல்லை என்பதால் தனது பந்தை முடிந்தவரை உதைக்கும் சுதந்திரம் அவருக்குக் கிடைத்துள்ளது. அது காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமே நடக்கும் செயல்.
- எழுதியவர் கடற்கரய்
-
ஆறாத கோபக் கனல்.. கூட்டணி உறுதிதான்.. ஆனால் ராகுல் காந்தி மீது செம கடுப்பில் திமுக தலைகள்.. ஏன்? -
கூட்டணி ஆட்சி முழக்கம் மொத்தமா மங்கிப் போச்சு.. காங்கிரஸ் தலைகளுக்கு செக் வைத்த திமுக! -
என்கிட்ட கேட்காம.. அறிவாலயம் போகாதீங்க.. கோபப்பட்ட ராகுல்.. கடைசியில் வேண்டா வெறுப்பாக சம்மதம்? -
ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராகுலின் நம்பிக்கை நட்சத்திரம்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? -
ராஜ்யசபா வேட்பாளர்கள்: தேமுதிக சுதீஷ், பாமக அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் வேட்பு மனு தாக்கல் -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
காமராஜரின் முதல் தோல்வி.. அண்ணாவின் கடைசி வெற்றி.. மறக்க முடியாத 1967 சட்டசபை தேர்தல்! -
Rajya sabha: அன்புமணி வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு.. பரிசீலனையின்போது பரபர! -
காங்கிரஸுக்கு 28+1! மிகுந்த மகிழ்ச்சி இல்லைதான்! ஆனாலும் தியாகம் செய்யணுமே! சலித்துக் கொண்ட சோடங்கர்! -
"All Finished"! அந்த சைகையை நான் திட்டமிட்டு காட்டவில்லை! ஸ்டாலின் விளக்கம்! -
5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. தெலுங்கானாவில் இருந்து MP ஆகும் அபிஷேக் சிங்வி! -
காமராஜர் ‘கே பிளான்’: திமுக வளர்ச்சியை தடுக்கவா? உட்கட்சி எதிரிகளை ஒடுக்கவா?












Click it and Unblock the Notifications