ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் போயஸ் கார்டனில் தரப்பட்டதா? ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி தமது கருத்துகளை பதிவு செய்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த அதிமுக ஆட்சியில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தமது விசாரணையை நடத்தி அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
தமிழக சட்டசபையில் நேற்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இடம்பெற்று தகவல்கள், பரிந்துரைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா உள்ளிட்ட 8 சதிகாரர்கள்
ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்தது டிசம்பர் 5-ந் தேதி என அறிவிக்கப்பட்டது; ஆனால் டிசம்பர் 4-ந் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஜெயலலிதாவின் மரணத்தை திட்டமிட்டே தாமதமாக அறிவித்திருக்கின்றனர் என்கிறது இந்த ஆணைய அறிக்கை. ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஓபிஎஸ் மீதும் சந்தேகம்
ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றக் கூடிய ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலாதான் தடுத்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஜெயலலிதா மறைந்த உடன் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது தொடர்பாகவும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சந்தேகம் எழுப்பி உள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்லக் கொல்லும் விஷமா?
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையமானது, ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்திருக்கிறது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பக்கம் 443-ல் இடம்பெற்றுள்ளதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் போயஸ் கார்டன் வீட்டில் அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று மனோஜ் பாண்டியன் கூறியிருந்தார். இது ஒரு வெறும் அனுமானமே தவிர, ஆதாரம் ஏதும் இல்லை. எந்தவொரு ஆதாரங்களும் ஆவணமாக அளிக்கப்படவில்லை.

விஷம் கொடுத்து கொல்லப்படவில்லை
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதும், பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தும், அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டிருக்கும் என்று எந்த பிரேத பரிசோதனை அறிக்கையோ, மருத்துவரோ கருத்து தெரிவிக்கவில்லை. ரத்த பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் விஷத்தின் தடயம் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். எனவே இக்குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லாததால் தவறானது; ஆதாரமற்றது என நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications