"ஆர்த்தி என் குயின்!" வெட்கப்பட்ட ஜெயம் ரவி.. கடைசியாக சொன்ன காதலர் தின வாழ்த்து என்ன தெரியுமா
சென்னை: ஆர்த்தி உடனான திருமண வாழ்க்கையில் இருந்து நடிகர் ஜெயம் ரவி விலகுவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயம் ரவி விவாகரத்து குறித்து அறிவித்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இணையத்தில் டிரெண்டானது.
நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியின் திருமண வாழ்க்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிந்து வாழப் போவதாக ஜெயம் ரவி நேற்றைய தினம் அறிவித்தார்..

ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி விவாகரத்து பெறப் போவதாகக் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதைப் பொதுவெளியில் ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
விவாகரத்து: பல மாதங்களாக நன்கு யோசித்து பரஸ்பரமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெயம் ரவி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். கனமான இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், பிரிந்ததற்கான காரணங்கள் முற்றிலும் தனிப்பட்டவை என்றும் அது குறித்து விவாதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி தங்கள் 15வது திருமண நாளைக் கொண்டாடினர். இருப்பினும், அதன் பிறகு ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியின் அனைத்து போட்டோக்களையும் நீக்கிவிட்டார்.
பின்னணி என்ன: 2009ம் ஆண்டு ஜெயம் ரவி- ஆர்த்தி இடையே திருமணம் நடந்த நிலையில், அவர்கள் பிரைவேட் வாழ்க்கையையே கொண்டிருந்தனர். இருப்பினும், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஜெயம் ரவி உடனான போட்டோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இந்தச் சூழலில் ஆர்த்தி தனது அனைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியின் அனைத்து போட்டோக்களையும் நீக்கியது சர்ச்சையானது.
இருப்பினும், 2003இல் ஜெயம் படம் ரிலீசாகி 21 ஆண்டுகள் ஆன போது அதற்காகத் தனது கணவரின் போட்டோவை பகிர்ந்தார். அதன் மூலம் விவாகரத்து பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேநேரம், மீண்டும் சில வாரங்களில் இருந்தே இந்த தம்பதிக்கு விவாகரத்து எனத் தகவல் மீண்டும் பரவியது. அது இப்போது உறுதியாகியுள்ளது.
ஜெயம் ரவி: முன்னதாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு இந்த தம்பதி பேட்டி ஒன்றை அளித்திருந்தனர். அதில் ஜெயம் ரவி, "நாங்கள் காதலித்த போதே எங்களால் வெளியே செல்ல முடிந்தது இல்லை. சினிமா நடிகராக இருந்ததால் பார்த்துப் பார்த்து வெளியே செல்ல வேண்டி இருந்தது. அப்போது எங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் காதல் குறித்துத் தெரியாது. இதனால் யாரும் எங்களைப் போட்டோ எடுக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்" என்றார்.
குயின்: ஜெயம் ரவி தொடர்ந்து தனது மனைவியைப் பாராட்டியே வந்துள்ளார். தனது மனைவியைக் குயின் என்றே அந்த நேர்காணலில் பல முறை குறிப்பிட்ட ஜெயம் ரவி, ஆர்த்தி தான் தனது முதல் ரசிகை என்றும் விமர்சகர் என்றும் கூறியிருந்தார். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சினிமா வாழ்க்கையிலும் சரி ஆர்த்தியின் பங்கு முக்கியமானது என்றும் கூறியிருந்தார்.
கடந்த 2022 காதலர் தினத்தன்று ஜெயம் ரவி ஆர்த்திக்குப் போட்டோ பகிர்ந்து காதலர் தின வாழ்க்கைகளைத் தெரிவித்து இருந்தார். "ஹேப்பி வேலன்டைன்ஸ் டே மை பேபி.." என்று அவர் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications