நள்ளிரவில் கருணாநிதி கைதானதை பார்த்து நான் கலங்கிவிட்டேன்! சட்டசபையில் ஜேசிடி பிரபாகர் உருக்கம்
சென்னை: நான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த போது முன்னாள் முதல்வர் கருணாநிதி இரவில் கைது செய்யப்பட்டதை பார்த்து கலங்கி விட்டேன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது முதல்வர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என மிரட்டல் விடுத்திருந்தது குறித்து அவையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: இந்த அவைக்கு பொருத்தமான ஒரு செய்தியை நான் சொல்கிறேன். நான் அதிமுகவில் இருந்து விலகி சில காலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இப்போது நடந்த சம்பவங்களில் ஆபாசமாக எந்த கட்சி பேசியிருந்தாலும், வன்முறையை தூண்டும் வகையில் கட்சியினர் பேசியிருந்தால், அதை கட்சித் தலைமை முதலில் கண்டிக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டார். ஆபாசமாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசுவோர் உங்கள் மனைவி, மகள், குடும்ப பெண்களிடம் கேட்டு பாருங்கள், இது போல் பேச போகிறேன் சரியா என்று!
அந்த குடும்ப பெண்கள் உங்கள் பேச்சை ஏற்றுக் கொண்டால் உங்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்ளும். கருணாநிதி மீது நான் மிகவும் மரியாதை கொண்டவர். கருணாநிதி இரவு கைதான போது என் மனைவியிடம் காலையில் சொன்னேன், "கருணாநிதி கைதான காட்சியை பார்த்ததும் நான் கலங்கிவிட்டேன்" என்றேன்.
அப்போது என் மனைவி, "வயதானவர், அவர் என்ன ஓடியா போயிட போகிறார், எதற்காக இரவு நேரத்தில் கைது செய்தார்கள்" என கேட்டார். உடனே நான் சார்ந்த கட்சியின் தலைவர் மூப்பனாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கருணாநிதி கைதை கண்டித்து நீங்கள் அறிக்கை கொடுக்க வேண்டும்" என்றேன்.
அதிலும் சில நிர்வாகிகள் அறிக்கை கொடுக்கக் கூடாது என்றனர். ஆனால் நான், வழக்கு எதுவாக இருந்தாலும் வயது முதிர்ந்த ஒருவரை, தமிழகத்திற்காக அதிகம் உழைத்த ஒருவரை இரவு நேரத்தில் கைது செய்து அழைத்து செல்வது தவறு! அந்த தவறை நீங்கள் சுட்டிக் காட்டாவிட்டால் யார் சுட்டிக் காட்ட முடியும் என கேட்டு மூப்பனாரை அறிக்கை கொடுக்க வைத்தேன்.
தவறு எங்கு நடந்தாலும் அந்த கட்சி தலைமை கண்டிக்க வேண்டும். வன்முறை பேச்சுகளுக்கு கண்டிக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலை இந்திய நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
இங்கிருந்துதான் கண்ணியமும் கவுரவமும், பாரம்பரியமும் இந்திய மக்கள் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். நாம் யார் என்பதை இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆபாச பேச்சுக்களையும் வன்முறை பேச்சுக்களையும் தவிர்க்க வேண்டும்.
மார்க்கண்டேயனின் வன்முறை பேச்சு குறித்து அமைச்சர்கள் எழுப்பியுள்ளனர். அவை உரிமைக் குழு தற்போது இல்லை, அந்த குழு அமைக்கப்படட்டும், பிறகு மார்க்கண்டயனிடம் நான் உரிய விளக்கம் கேட்டு அதை உரிமை குழுவுக்கு அனுப்பி விடுகிறேன். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு, சென்னையில் மேம்பாலங்கள் அமைத்ததில் 120 கோடி நிதி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு முறையான முன்னறிவிப்போ அல்லது அழைப்பாணையோ வழங்கவில்லை. கைது செய்யப்பட்ட போது முரசொலி மாறன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் ஓடி வந்தனர். இந்த கைது விவகாரம் குறித்து வீடியோ வெளியான நிலையில் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.


Click it and Unblock the Notifications
