அம்பானியை காப்பாற்றிய துரந்தர்.. இந்தியாவிலேயே நாங்க தான்.. ஒரு படம் கொடுத்த மெகா பவர்!
ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சி என்றாலே பொதுவாக தொலைத்தொடர்பு, ரீடைல் வணிகம், பெட்ரோ கெமிக்கல் போன்ற துறைகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் கண்டென்ட் துறையிலும் ரிலையன்ஸ் அமைதியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வருகிறது. அந்த முயற்சியின் பலனை தற்போது 'துரந்தர்' திரைப்படத் தொடர் மூலம் ஜியோ ஸ்டுடியோஸ் அறுவடை செய்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் பொழுதுபோக்கு பிரிவு, இந்திய திரைப்பட மற்றும் டிஜிட்டல் கண்டென்ட் துறையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் புதிய கண்டென்ட் - வணிகம் இணைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆகாஷ் அம்பானி இன்று நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 49வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
துரந்தர் தொடர் ரூ.3,000 கோடி கடந்தது
ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்த துரந்தர் (Dhurandhar) திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.3,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில், ஒவ்வொரு படமும் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்த முதல் 2பாகம் கொண்ட படம் இதுவாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஜியோ ஸ்டுடியோஸ், அதிக வசூல் ஈட்டிய இந்தி திரைப்பட ஸ்டுடியோவாக தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. இந்த சாதனை, ஜியோ ஸ்டுடியோஸ் இந்திய திரைப்படத் துறையில் எவ்வளவு வலுவான நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்கிறது.
ஜியோஸ்டார், ஜியோஹாட்ஸ்டார் புதிய சாதனைகள்
ஜியோஸ்டார், இந்திய தொலைக்காட்சி பிரிவில் நாட்டில் 34.7% பார்வையாளர் பங்குடன் முன்னணியில் உள்ளது. இது அடுத்த மூன்று போட்டியாளர்களின் பங்கிற்கு இணையானது. மேலும் தினசரி 38.9 கோடி பார்வையாளர்கள் பல்வேறு மொழிகளிலும் வகைகளிலும் ஜியோஸ்டார் கண்டென்ட்-ஐ பார்த்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து ஜியோஹாட்ஸ்டார் தளம் (APP), ஆண்டு சராசரியாக 45.1 கோடி மாதாந்திர செயல் பயனர்களை (MAU) கொண்டுள்ளது. மேலும், இந்த தளத்தில் கண்டென்ட்-வணிகம் இணைப்பு (Content-to-Commerce) என்ற புதிய வர்த்தக முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இருக்கும் பயனர்கள் தங்கள் விருப்பமான நிகழ்ச்சிகள் அல்லது நேரடி விளையாட்டு போட்டிகளைப் பார்க்கும்போதே, ஆப்-ஐ விட்டு வெளியேறாமல் பொருட்களை வாங்கும் வசதி அளிக்கப்பட்டு வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது.
ஜியோஸ்டார் ஜென்ஏஐ மீடியா ஸ்டுடியோ தொடக்கம்
அகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 49-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜியோஸ்டார் ஜென்ஏஐ மீடியா ஸ்டுடியோ (JioStar GenAI Media Studio - JAMS) என்ற புதிய தளத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இது, செயற்கை நுண்ணறிவை (AI) கண்டென்ட உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்தும் முழுமையான தளமாகும்.
இந்த தளம், பல்வேறு வடிவங்களிலும், இந்திய மொழிகளிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய பொழுதுபோக்கு துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications