சமச்சீர் கல்வியில் மீண்டும் கணினி பாடம்! சட்டசபையில் அறிவிப்பு! பட்டதாரி ஆசிரியர் சங்கம் மகிழ்ச்சி
சென்னை: தமிழகம் முழுவதும் வேலையின்றி தவித்த 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று தமிழக சட்டசபையில் நிறைவேறியது. சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடப்பிரிவை நீக்கியிருந்த நிலையில் தற்போது அதை மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வேலைக்காக காத்திருக்கும் கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமரேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் கணினி தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் பி.எட். கணினி அறிவியலில் பட்டம் பெற்று வேலைக்காக காத்திருக்கும் 60,000 இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்து வந்தது.
ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நடைபெறும் ஆசிரியர் நியமனங்களில் தமிழ், ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் ,வரலாறு, பொருளாதாரம் ,வணிகவியல், உயிரியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பாடங்களை கற்று பி.எட் படித்தவர்கள் தொடர்ந்து பணி நியமனம் பெற்று வரும் நிலையில் கணினி அறிவியலில் பட்டம் பெற்று பிஎட் பெற்றவர்கள் ,அதாவது பிஎஸ்சி, பிஎட்,. எம்எஸ்சி., பிஎட்., கணினி அறிவியல் படித்தவர்களுக்கு 1 முதல் 10 வரை பாடங்களை கற்பிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இதுவரை இருந்து வந்தது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கணினி அறிவியலில் பிஎட் முடித்துவிட்டு அரசு பள்ளிகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலை இன்றி கிடைக்கும் பணியில் சொற்ப ஊதியத்தில் வேலை செய்து வந்தனர்.
2009 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தினார். அப்போது கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக அறிமுகப்படுத்தியதுடன் அதற்கென்று புத்தகங்களையும் வெளியிட்டு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களையும் கணினி கல்வியில் உயர்த்திட திட்டங்களை வடிவமைத்தார்.
ஆனால் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தொலைநோக்கு சிந்தனையோடு கொண்டு வந்த அந்தத் திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனி பாடமாகவும் ,ஆறாவது பாடமாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் சமச்சீர் கல்வி இருந்தும் கணினி பாடம் நீக்கப்பட்டதால் 60 ஆயிரம் பட்டதாரி கணினி ஆசிரியர்கள் வேலையை இழந்தனர். மீண்டும் கணினி பாடத்திட்டத்தை சமச்சீர் கல்வியில் சேர்க்க வேண்டும் என பல முறை தமிழக முதல்வருக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் ஒரு பாடமாக கொண்டு வரப்படும் என திங்கட்கிழமை நடைபெற்ற பேரவை மானிய கோரிக்கையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதன் மூலம் மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் கணினி கல்வியை பெற முடியும் என்பது மகிழ்ச்சிகரமான ஒன்று.
மீண்டும் கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் சூழல் உள்ளது. இதை ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும், பள்ளிக் கல்வித் துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குமரேசன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications