ஜான் பாண்டியன் கிட்ட வீரமணி வீடியோ இருக்கா? சாந்தியை மிரட்டினாரா.. சைபர் கிரைம் போகும் தமமுக தலைவர்
சென்னை: ஜெம் வீரமணி விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பேட்டிகள் புதிய கேள்விகளை எழுப்பி வருகின்றன. குறிப்பாக ஜான் பாண்டியன் பெயர் இந்த விவகாரத்தில் எப்படி வந்தது என்பதில் ரஞ்சன்குமார் ஒருபக்கமாகவும், ஜான் பாண்டியன் மறுபக்கமாகவும் விளக்கம் அளித்தனர். இதனால் வீரமணி விவகாரம் மேலும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
நேற்று முன்தினம் ரஞ்சன்குமார் அளித்த பேட்டியில், சாந்தியை ஜான் பாண்டியனிடம் சந்திக்க வைத்தது தான்தான் என்று தெரிவித்திருந்தார். அப்போது ரஞ்சன்குமார் சொன்னதாவது:

ரஞ்சன்குமார் பேட்டி
"2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக சாந்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு சாந்தி என்னை தொடர்பு கொண்டார். ஜான் பாண்டியன் தன்னை மிரட்டுவதாகவும், அவரை சந்தித்து பேச உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜான் பாண்டியனையும் சாந்தியையும் சந்திக்க வைத்தேன். அந்த சந்திப்பின்போதுதான் வீரமணிக்கும் சாந்திக்கும் இடையேயான பிரச்சினை பற்றி எனக்கு தெரியவந்தது. பிறகு சாந்தியின் வீட்டுக்கு சென்றபோது அவரது கணவர் மகேந்திரனும் இருந்தார். அப்போது சாந்தி தனது அறையில் பதிவானதாக கூறப்படும் ஒரு வீடியோவை டிவியில் போட்டுக் காட்டினார். அதில் 15, 16 வயது சிறுமியிடம் வீரமணி தவறாக நடந்து கொள்வது போன்ற காட்சிகள் இருந்தன.
சாந்தி கேட்ட ரூ.20 கோடி
சாந்தியும் அவரது கணவரும் வெளியே சென்றபோது அந்த வீடியோவை எனது செல்போனில் பதிவு செய்தேன். வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்று, 2024 அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலேயே காவல்துறை உயர் அதிகாரியிடம் வீடியோ, போட்டோ ஆதாரங்களுடன் புகார் அளித்தேன்.
இந்த விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் முழுமையாக ஒத்துழைப்பேன். உண்மை விரைவில் வெளிவரும்" என்று ரஞ்சன்குமார் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேட்டி வெளியான நிலையில், உடனே ஜான் பாண்டியன் தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார். அதில், ரஞ்சன்குமார்தான் தன்னை முதலில் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் தாஜ் ஓட்டலில் சாந்தியை சந்தித்ததாகவும் கூறினார்.
"சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசியல் பிரமுகர் மூலமாக ரஞ்சன்குமார் என்னை சந்திக்க வந்தார். அவர் என் வீட்டுக்கு வந்தார். சாந்தி என்ற பெண் என்னை சந்திக்க விரும்புவதாக அப்போது தெரிவித்தார்.
விளக்கம் தந்த ஜான் பாண்டியன்
பின்னர் தாஜ் ஓட்டலில் சாந்தியை ரஞ்சன்குமார் அழைத்து வந்தார். அப்போது சாந்தி, வீரமணி தொடர்பான தனது பிரச்சினையை என்னிடம் கூறினார். ரஞ்சன்குமார், வீரமணியிடம் எப்படியாவது ரூ.20 கோடி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். இந்த மாதிரியான விஷயங்களில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். அதன்பிறகு இரண்டரை ஆண்டுகளாக ரஞ்சன்குமாரோ, சாந்தியோ என்னை தொடர்பு கொள்ளவில்லை" என்று ஜான் பாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்போது ஜான் பாண்டியன் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்த முறை தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்படுவதாகவும், வீரமணி விவகாரத்தில் தன்னிடம் எந்த வீடியோ ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
தலையிட விரும்பவில்லை
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் பேசும்போது, "வீரமணியை தொழிலதிபர் என்ற முறையில்தான் எனக்குத் தெரியும். அவருடைய தனிப்பட்ட விஷயங்கள் எனக்கு எதுவும் தெரியாது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சன்குமார் என்னை சந்திக்க வந்தார். சாந்தி என்ற பெண் என்னை தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்புவதாக அவர் கூறினார்.
பின்னர் ரஞ்சன்குமார் சாந்தியை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார். அப்போது சாந்தி, வீரமணி தன்னை ஏமாற்றி தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக கூறினார். வீரமணியிடம் இருந்து ரூ.20 கோடி பணம் பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டார்.
சாந்தியை நான் மிரட்டினேனா?
இந்த விவகாரம் அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை என்றும், இதில் நான் தலையிட மாட்டேன் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். அதன்பிறகு ரஞ்சன்குமாரோ, சாந்தியோ என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் சாந்தியை மிரட்டியிருந்தால் அவர் போலீஸில் புகார் அளித்திருக்கலாம். அப்படி இருக்கும்போது என்னை சந்திக்க வந்தது ஏன்? வீரமணியிடம் இருந்து பணம் வாங்கித் தர வேண்டும் என்று என்னிடம் கேட்டது சாந்திதான்.
வீரமணி தொடர்பான எந்த வீடியோ ஆதாரமும் என்னிடம் இல்லை. அப்படி ஏதாவது ஆதாரம் என்னிடம் இருந்திருந்தால் அதை வெளியிட்டு நடவடிக்கை எடுத்திருப்பேன். இப்போது என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
