கூட்டுப்பட்டா, தனிப் பட்டா அவசியம்.. நிலம் வாங்குவோர் அறிய வேண்டியது! TSLR பட்டா பற்றி தெரியுமா? ஓஹோ
சென்னை: நிலத்தின் உரிமையாளர் பெயர், பரப்பளவு போன்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை சான்றிதழ் பெயர்தான் பட்டா.. இது நிலத்தின் உரிமையை நிரூபிக்கப் பயன்படும் ஒரு சட்ட ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் என்பதால் மிக முக்கிய ஆவணமாக பட்டா கருதப்படுகிறது. இந்த பட்டாவில் பல வகைகள் உள்ளன. அதில் 3 வகையான பட்டா பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு நிலத்தின் வகை, உரிமையாளர் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து பட்டா மாறுபடும்.. எனினும், பட்டாவில், சம்பந்தப்பட்ட மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலம் சர்வே எண், நிலம் வகைகள், வரித் தொகை, விஸ்தீரணம், உரிமையாளரின் பெயர், அவரின் தகப்பனார் அல்லது கணவரின் பெயர் போன்ற விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

பட்டாக்களில் பல வகைகள் உள்ளன.. யுடிஆர் பட்டா (UDR Data Registry), 2. தோராய பட்டா & தூய பட்டா, ஏடி கண்டிசன் பட்டா- AD Assignment Land(Adi Dravidar), 4. நில ஒப்படை பட்டா (Assignment patta), 5. டிஎஸ்எல்ஆர் பட்டா (TSLR PATTA = Town Survey Land Record), 6. 2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா, 7. கூட்டு பட்டா (joint patta), 8. தனி பட்டா (Individual Patta) இப்படி பல வகைகள் உள்ளன. இதில், கூட்டுப்பட்டா, தனிப் பட்டா, டிஎஸ்எல்ஆர் பட்டா போன்றவற்றை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
டிஎஸ்எல்ஆர் பட்டா (TSLR PATTA)
டிஎஸ்எல்ஆர் பட்டா என்றால் என்ன? TSLR PATTA என்பது Town Survey Land Record என்பதாகும்.. அதாவது, கிராம விவசாய நிலத்தை பட்டா மூலம் பெறப்படுகிறது. கிராமப்புற விவசாய நிலத்தை தவிர, நகரத்தில் உள்ள நிலத்தின் அளவு மற்றும் பதிவு ஆவணம் பற்றிய விவரக்குறிப்புகள் உள்ள TSLR Town Survey Land Record மூலம் பட்டாவாக வழங்கப்படும். சுருக்கமாக சொல்லப்போனால், நகரங்களில் உள்ள நிலங்களுக்கான பட்டா ஆகும்
நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலுள்ள நிலங்களை துல்லியமாக சர்வே செய்து, அங்கு குடியிருக்கும் மக்களுக்கு இந்த பட்டா வழங்கப்படும். கிராம பகுதிகளில் இருக்கும் பட்டா மற்றும் நகரப் பகுதிகளில் இருக்கும் பட்டா இவைகளுக்குள் சிறிய வேறுபாடு உள்ளது.. அதன்படி, நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்புமிக்கது என்பதால் பிழைகள் (ERROR) குறைவாக இருக்கும்.
கிராம பகுதி சர்வேக்களில் தோராயமாக ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். எனவே, அதிக துல்லியமும், எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யப்படுகின்றன.
கூட்டு பட்டா & தனிப்பட்டா
கூட்டு பட்டா (joint patta) என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்களை கொண்டது.. இதில், யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியாது..
அதேபோல, யார் நிலம் எங்கே இருக்கிறது என்றும் தெரியாது. ஒருவருக்கு அதிகமாகவோ மற்றவர்களுக்கு குறைந்த அளவிலோ நிலம் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பட்டாவே வழங்கப்பட்டிருக்கும்.. அனைத்து பட்டாவிலும், அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருக்கும். உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கிய பட்டாவின் பெயர்தான் கூட்டு பட்டா.
தனி பட்டா (Individual Patta) என்பது, தனிப்பட்ட நபரின் பெயரிலிருக்கும் பட்டாவாகும்.. இந்த பட்டாவில் சர்வே நெம்பர் உட்பிரிவு எண் ஆகியவை தனியாக இருக்கும். நில உரிமை ஆவணத்தின் தன்மையில், ஒவ்வொருவருக்கும் பதிவு செய்யப்பட்டது. எனவே, பட்டா எண், சர்வே எண், உட்பிரிவு, நிலத்தின் அளவு, FMP MAP போன்றவை தெளிவாகவே இடம்பெற்றிருக்கும்.
நிபந்தனை பட்டா என்றால் என்ன
அரசு, தனிநபர் அல்லது சமூக ரீதியான குழுக்களுக்கு இலவச பட்டா வழங்கும்போது, குறிப்பிட்ட கால வரையறை வைத்து பட்டாவில் நிபந்தனை விதித்து தரப்படுவதாகும்.. அந்தக் காலவரையறை முடியும் வரை உங்களின் பட்டா இடத்தை அல்லது வீட்டை விற்க முடியாது. இதற்கு பெயர்தான் கண்டிஷன் பட்டாவாகும்.
டி.கே.டி பட்டா என்றால் என்ன
டி.கே.டி பட்டா என்பது நிலமில்லா மலைவாழ் மக்களுக்கு, அரசால் வழங்கப்படுவது... அதாவது, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் இந்த டி.கே.டி பட்டாக்கள் அதிகம். இங்கு நிலம் வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும். அதேபோல, மலைப்பகுதிகளில் டி.கே.டி., பட்டா விளைநிலங்களை வைத்துள்ளவர்கள் அதை வணிகரீதியாக பயன்படுத்தினால், அந்த இடம் பறிமுதல் செய்யப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications