'இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்.. விரட்டப்பட வேண்டியவர்கள்'.. கரூர் எம்.பி ஜோதிமணி ஆவேச ட்வீட்!
சென்னை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது மகன் மற்றும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரை மோதச்செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் வன்முறை மூண்டது.

8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரை மோதச்செய்ததை பாஜக முதலில் மறுத்தது. அதன்பிறகு இது தொடர்பான தெளிவான வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டதால் பாஜகவால் பதில் கூற முடியவில்லை.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரது மகன் கைது செய்யப்பட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி உள்ளிட்ட பலர் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

கரூர் எம்.பி ஜோதிமணி
இந்த நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு காங்கிரசின் கரூர் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- பாஜக அமைச்சர் மகன் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்கிறார்.விவசாயிகள்,ஊடகவியலாளர், வீடியோ பதிவு செய்தவர் என்று தொடர்ச்சியாக கொலைகள்.கொலையாளிகளை மோடியும்,பிஜேபியும் பாதுகாக்கிறார்கள்.இவர்கள் 'இந்துக்களின் காவலர்' வேடம் தறித்த கொலையாளிகள்.கோட்சேவின் வாரிசுகள்.

விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்
இந்த பாஜகவினர் அதிகாரத்தில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள். இந்த உன்னதமான பணியை மக்களின் உதவியோடு காங்கிரஸ் கட்சி முன்னின்று நடத்திக் காட்டும். பாஜகவினரால் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. விவசாயிகளைப் படுகொலை செய்யும் பாஜக அரசின் ,மூன்று நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பிறகு பிரியங்கா காந்தி இன்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்.விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த பாஜக அமைச்சரின் மகன் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்.படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களின் கதி? என்று கரூர் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.

அன்பும்,கருணையும்
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் படங்களை டுவிட்டரில் வெளியிட்ட ஜோதிமணி, ''அரசியல் என்பது அன்பும்,கருணையும்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications