பொன்முடி பதவி தப்புமா.. வெளியேறும் அமைச்சர்கள் யார் யார்? பத்திரிக்கையாளர் லட்சுமணன் சொன்னது என்ன?
சென்னை: நாளை அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்றும், உயர்கல்வி துறை அமைச்சராக உள்ள பொன்முடியின் பதவி மாற்றப்பட உள்ளதாகவும், புதிய உயர் கல்வி அமைச்சராக கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஏஎஸ் லட்சுமணன் கூறியுள்ளார். அவர் யார் என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாட்களுக்கு சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் காரணமாக நிபந்தனை ஜாமீனில் நேற்று முன்தினம் வெளியே வந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் 2 மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக இளையவர்கள் 2 பேர் சேர்க்கப்பட உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியது.

அதில், சேலம் வடக்கு தொகுதி ராஜேந்திரன், ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன் ஆகியோரின் பெயர் அதிகமாக இடம் பெற வாய்ப்பு உள்ளதாம். இதேபோல் ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராவார் என்றும் அதற்கு பதிலாக ஒரு அமைச்சர் நீக்கப்படுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின,.
இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் வெளியிட்டுள்ள பதிவில், "பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது.மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது. இந்தப் புரட்சிக்கு சமீப பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான். பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர்.
சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவர் போய் ஒருவர் வருகிறார். பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது" என்று கூறியிருந்தார். பத்திரிக்கையாளர் லட்சுமணனின் கூற்றுப்படி பார்த்தால் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் பதவி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றினால், அதற்கு பதில் பட்டியல் இன அமைச்சர் பதவியேற்பார் என்றும் கணித்துள்ளார். திமுகவில் தற்போது உள்ள நிலையில், பென்ஜமின் உயர்கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அதேபோல் ரகுபதி, செஞ்சி மஸ்தான் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். யார் யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்பது அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகே தெரியும்..












Click it and Unblock the Notifications