தாய்மாமன் தங்க மோதிரம்.. ஜாய் ஆலுக்காஸ் + கல்யாண் ஜுவல்லர்ஸ்க்கு டெண்டர் வழங்கல்.. மொத்தம் எவ்வளவு?
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு சார்பில் 'தாய்மாமன் தங்கமோதிரம்' திட்டத்துக்கான டெண்டர் 2 ஜுவல்லரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணை இன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக உள்ள விஜய் தனது கட்சியான தவெகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்று தான் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம். இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு முதல்வர் விஜய் ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருந்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது இந்நிலையில் தான் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டர் நடைமுறை முடிவடைந்த நிலையில் 2 ஜுவல்லரிக்கு பணி ஆணையை தமிழக அரசு வழங்கி உள்ளது. அதன்படி ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லரி ஆகியவை 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 2 ஜுவல்லர்ஸ் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து, செய்கூலி, சேதாரம் உள்பட பிற அனைத்து செலவுக்கும் வெறும் 1 பைசாவில் கொடுக்க ஒப்புக்கொண்ட நிலையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லரி ஆகியவை முறையே 70:30 என்ற விகிதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்த மோதிரத்தில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70 சதவீதத்தையும், கல்யாண் ஜூவல்லர்ஸ் 30 சதவீதத்தையும் அரசுக்கு வழங்க உள்ளது. முதற்கட்டமாக இரு ஜுவல்லரிகளிடம் இருந்து மொத்தம் 4.41 லட்சம் தங்க மோதிரங்கள் வாங்கி குழந்தைகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.இந்த 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின்படி ஒரு கிராம் தங்க மோதிரம் என்பது தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்று கொண்டால் மட்டுமே கிடைக்கும். வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்களின் குழந்தைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் அரசின் ஒரு கிராம் தங்க மோதிரம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
