சரவண பவன் அதிபரை சிறைக்கு அனுப்பிய கதை! நீண்ட யோசனைக்கு பிறகு உரிமம் வழங்கிய ஜீவஜோதி!
சென்னை: சரவண பவன் ஹோட்டல் அதிபரை சிறைக்கு அனுப்பிய கதையை திரைப்படமாக தயாரிக்க, ஜீவஜோதியிடம் படக்குழு ஒரு வழியாக உரிமம் பெற்றுவிட்டது.
ஜீவஜோதி தனியொரு பெண்ணாக நின்று சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற நிகழ்வை படத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
'தோசா கிங்' என்ற பெயரில் இந்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஜங்கிலி பிக்சர்ஸ் என்ற பிரபல சினிமா நிறுவனம் தயாரிப்பதாக ஓராண்டுக்கு முன்னரே தகவல் வெளியாகிய நிலையில், இப்போது தான் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சரவண பவன்
20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தனது கணவர் கொலைக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்கும் வீட்டுக்குமாக பல ஆண்டுகள் அலைந்து சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுக் கொடுத்தவர் ஜீவஜோதி. தனியொரு பெண்ணாக சட்டப்போராட்டம் நடத்தி, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஒருவரை எதிர்த்து போராடி அதில் வெற்றியும் பெற்றார் ஜீவஜோதி.

தோசா கிங்
ஜீவஜோதியால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் 'தோசா கிங்' என்ற பெயரில் இந்தியில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. ஜங்கிலி பிக்சர்ஸ் என்ற பிரபல சினிமா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. சரவண பவன் ஹோட்டல் அதிபரை எதிர்த்து ஜீவஜோதி வழக்கு நடத்திய போது அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி படத்தில் காட்சிகள் அமையவுள்ளது.

ஜீவஜோதி ஓப்புதல்
சரவண பவன் ஹோட்டல் அதிபரை சிறைக்கு அனுப்பிய கதையை திரைப்படமாக எடுக்க ஜீவஜோதியிடம் படக்குழு உரிமம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், இந்தியில் உருவாகும் இந்த தோசா கிங் என்ற திரைப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கவிருக்கிறார். ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்ததால் ஜீவஜோதியின் கணவர் கொலை குறித்த வழக்கின் விவரம் அவருக்கு ஆழமாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் ஜீவஜோதி
ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்த ஜீவஜோதி அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். சசிகலா சிறைவாசம் சென்ற பின்னர் அதிமுகவில் நிலவிய குழப்பத்தால் தனது டைலரிங் தொழில், மற்றும் உணவகத்தை நடத்துவதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த ஜீவஜோதி தஞ்சை மாவட்ட பிரமுகராக கட்சி நிகழ்ச்சிகளில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

ஓராண்டுக்கு பிறகு
கடந்த 2021-ஆம் ஆண்டு முதலே இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜீவஜோதியிடம் இப்போது தான் படக்குழு உரிமம் பெற்றுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications