நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணி அமைக்கிறதா அதிமுக? கே.பி. முனுசாமி பேசியதை கேட்டீங்களா?
சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என எம்எல்ஏ கே.பி.முனுசாமி கூறியதை வைத்து பார்க்கும் போது அதிமுக- பாஜக இடையே மோதல் முற்றுகிறது.
2023 - 2024 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கலானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பட்ஜெட் மீதான பொது விவாதங்கள் நடந்து வருகின்றன. நேற்றைய தினம் கூட ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டசபை கூடியது
இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபை கூடியது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, அதிமுக ஆட்சியில்தான் கல்வி மேம்பட்டது என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, 3 கி.மீ.க்கு ஒரு பள்ளி, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என சொன்னவர் அவர்தான். உயர்கல்வி என்று சொன்னாலே அது கலைஞர் ஆட்சிதான்.

இரு மொழி கொள்கை
இரு மொழி கொள்கையில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு தனிச் சலுகைகள் கொடுத்ததும் கலைஞர்தான் என்றார். பின்னர் கே.பி.முனுசாமி திமுகவின் சில திட்டங்களை பாராட்டியும் சில திட்டங்களை எதிர்த்தும் பேசினார். மேலும் அவர் எவ்வளவுதான் உங்களை (திமுக) பாராட்டினாலும் ஒரு கட்டத்தில் உங்களை நாங்கள் (அதிமுக) எதிர்த்தே ஆக வேண்டும்.

முற்றுகிறது அதிமுக- பாஜக மோதல்
நாங்கள் உங்கள் வரிசையில் வருவதற்கும் நீங்கள் எங்கள் வரிசையில் வருவதற்கும் நாங்கள் உங்களை எதிர்த்தே ஆக வேண்டும். இதுதான் நிலவரமாக உள்ளது என அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்ற அளவுக்கு கே.பி.முனுசாமியின் கருத்து இருந்தது. மூத்த நிர்வாகியான கே.பி.முனுசாமி சொல்வதை பார்த்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியை அதிமுக அமைக்கும் என்றே தெரிகிறது.

அதிமுக- பாஜக
அண்மைக்காலமாக அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என தாம் கருதுவதாக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். மேலும் அவ்வாறு கூட்டணி வைத்தால் தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியுள்ளார். இந்த கருத்தை பாஜக மூத்த தலைவர்களான வானதி, நாராயணன் திருப்பதி, கரு நாகராஜன் உள்ளிட்டோர் கண்டித்திருந்தனர்.

ஜே.பி.நட்டா
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என தேசிய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். அது போல் தமிழகத்திலிருந்து 25 எம்பி நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கூறி வருகிறார்கள். ஆனால் சட்டசபையில் கே.பி. முனுசாமியோ தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என்பதை போல் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு அதிகரிக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தொடர்ந்து 2019ஆம் ஆண்டு முதல் தோல்வி அடைந்து வருவதாக அக்கட்சியின் சில நிர்வாகிகள் கருதுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications