Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது அளிப்பதை எதிர்ப்பதா? ஏன் பெரியார் குறித்து பாட கூடாதா? கி.வீரமணி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிப்பதை எதிர்ப்பதா? பெரியார் பற்றி அவர் பாடக் கூடாதா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

K Veeramani condemns why T M Krishna should not sing on Periyar

கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பு இவ்வாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இசைத் துறையில் புகழ்பெற்ற டி.எம். கிருஷ்ணாவுக்கு விருதும் - எதிர்க்கும் சக்திகளும்!

கர்நாடக இசைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும், கர்நாடக இசையைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும், இறுக்கமாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாறாக அதன் ஆய்வில் கவனம் செலுத்துவதன் மூலமும் கலையின் கேட்போர் தளத்தை விரிவுபடுத்துவதற்கு அவர் பணியாற்றியமைக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாக இசையைப் பயன்படுத்துவதற்காகவும் இவ்விருது வழங்கப்படுவதாக அவ்வமைப்பு கடந்த மார்ச் 17 அன்று அறிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மியூசிக் அகாடமி இத்தகைய விருதுகளை அறிவிப்பதும், அவ்வமைப்பின் உயரிய விருதான சங்கீத கலாநிதி பெறுபவரை அவ்வாண்டின் இறுதியில் நடக்கும் இசை விழாவுக்குத் தலைமையேற்கச் செய்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.

அவ்வகையில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1 வரை நடைபெறும் விழாவிற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமையேற்பார் என்றும் அறிவிப்புச் செய்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 20-ஆம் தேதியன்று, அதே இசைத் துறையில் உள்ள ரஞ்சனி, காயத்ரி ஆகியோர், டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் விழாவில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதனை மியூசிக் அகாடமியின் தலைவருக்குத் தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் இது குறித்து பரப்பினர். விருதுத் தேர்வு தொடர்பான கருத்து அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.

ஆனால், அதற்கு அவர்கள் தந்தை பெரியாரைத் தொடர்புபடுத்தி தெரிவித்துள்ள காரணம், உண்மைக்கு மாறானதும், அறியாமையின் பாற்பட்டதும், சமூக - ஜாதி வெறுப்புணர்ச்சியினால் தூண்டப்பட்டதுமாகும். தன்னுடைய பாணியில் கர்நாடக இசையைச் சபாக்களைத் தாண்டி, சென்னை தெருவிழாக்களிலும், அதன் பாடுபொருள்களை சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காகவும், ஜாதி - மத வாதங்களுக்கு எதிராகவும் அமைத்துக் கொண்ட டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கப்படுவதற்கான அறிவிப்பில் அவருடைய சமூகப் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது மியூசிக் அகாடமி.

இசை மேதை டி.எம். கிருஷ்ணா ஜாதி, மத, உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதநேயர் (A Humanist). "மனித குலத்தை ஒரு குலமாகக் கருதி, காற்றும், மழையும், சூரிய ஒளியும் எப்படி மானுடத்திற்கு இயற்கை அளித்த பொது உரிமையுள்ள பொது உடைமைகளோ அதுபோல, இசையின்பமும்கூட அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் ஓர் அற்புத ஊற்றாக, அனைவருக்கும் உரிய பொதுச்சொத்தாக்க வேண்டும்! யாருக்கும் எட்டாது, ஒரு சிலருக்கே என்ற ஏகபோகத்தை மாற்றி திறமையும் - புதுமையும் - புத்தாக்கங்களும் (Innovation) இசையிலும் புகுத்தப்பட வேண்டும்.

இசையை ஜாதிக் கண்ணாடி போட்டு பார்ப்பது தவறு" என்ற புதிய பார்வை கொண்டவர்.
இதன் காரணமாக அவர் ஒரு பெரியார் பற்றாளர்கூட.
கடந்த ஆண்டு, வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய இசை மற்றும் குரலிலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் வரிகளிலும் "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்" என்ற பாடல் வெளியானது. இவைதான் மேற்சொன்ன பாடகிகள் இருவரின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாகியுள்ளது. டி.எம். கிருஷ்ணாவின் முயற்சிகளிலும், அவரது சமூக - அரசியல் நிலைப்பாடுகளிலும் முரண்பாடுகள் யாருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள் முழுக்க தந்தை பெரியாரின்மீதான அவதூறும் வெறுப்புணர்வும் நிரம்பியவை ஆகும்.

தந்தை பெரியார் மனித நேயத்துக்காகவும், சமத்துவம் - சமூகநீதிக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடிய உலகத் தலைவராவார். தந்தை பெரியாரின் கருத்துகள் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி, உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்படுவதும், சமூகநீதிக்கான அடையாளமாக தந்தை பெரியார் கொண்டாடப்படுவதும் பெரியார் உலகமயமாகி வருவதும், அவர்களை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. அதன் காரணமாகவே, இனப் படுகொலையை முன்மொழிந்தவர் என்று அவரைப் பற்றி திட்டமிட்டு, தொடர்ந்து சில பார்ப்பனர்கள் இட்டுக் கட்டி ஆங்கிலத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

(கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மாநாடு வரை இவர்களின் அவதூறு பரப்பும் முயற்சிகள் தொடர்ந்தன.) இன்று அதனையே கர்நாடக இசைப் பாடகிகளான மேற்சொன்ன இருவரும் தங்கள் பதிவில் எழுதியுள்ளனர். வன்முறையைத் தவிர்த்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்மீது அவதூறு பரப்புவதா?
உலகிலேயே வன்முறையை நாடாமல், ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திய தலைவர் தந்தை பெரியார். உலகில் வேறெங்கும் இல்லாத வர்ணாசிரம - ஜாதி - தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சமரசமற்ற கருத்துப் போர் நடத்தி, அதற்காகவே சுயமரியாதை இயக்கம் கண்டு, திராவிட இயக்கத்தை வழிநடத்தி, அதில் வெற்றியும் கண்டு வருபவர் தந்தை பெரியார்.

காரணம், அவர் ஓர் தனி மனிதரல்லர் - தத்துவம்! உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னும், அவரது கொள்கைகள், போராட்டங்கள்தான் இன்றும் வெற்றி பெறுகின்றன. இத்தனைப் பெரிய சமூகப் போராட்டத்தில் எந்த இடத்திலும் வன்முறையில் ஈடுபடாமல் ஓர் அமைதிப் புரட்சி இயக்கமாக இதை உருவாக்கி, வழிநடத்தியவர். இன்றுவரை அந்தப் பாதையில் தடம்மாறாமல் திராவிடர் கழகம் நடைபோடுகிறது. தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு சமூகத்திற்காகப் போராடும் கருப்பு மெழுகுவர்த்திகள் தந்தை பெரியாரின் தொண்டர்கள். போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று, தாக்குதல்களுக்கு உள்ளாகி பெரியார் தொண்டர்கள் உயிரைத் துறந்ததுண்டு. ஆனால், அப்போதும் நாம் வன்முறையை நாடியதில்லை.

காந்தியாரைப் படுகொலை செய்த கால கட்டத்தில்கூட, பார்ப்பனர்கள்மீது ஏவாமல் அமைதியை நிலைநாட்டியவர் தந்தை பெரியார்
இந்துத்துவ வெறியன் நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனரால் காந்தியார் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டபோது, இந்தியா முழுவதும் கலவரங்கள் நடை பெற்றன; மராட்டியத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மீது துளி வன்முறைகூட நிகழாமல் காப்பாற்றியவர் தந்தை பெரியார். அகில இந்திய வானொலியில் உரையாற்றி, அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகத் தக்க வைத்த மனிதநேய மாண்பாளர் அவர்.

குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜாதி ஒழிப்புப் போராட்டம் என வாழ்நாள் முழுக்க போராட்டங்களால் பொழுதளந்தவர் - தந்தை பெரியார் இவற்றில் எங்கேனும் வன்முறையைக் கைக்கொண்டவரல்லர். அதனால்தான் இன்றளவும் போற்றப்படுகிற தலைவராக அவர் இருக்கிறார். இராயப்பேட்டை யுவர் சங்கக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குத் தந்தை பெரியார் கூறிய அறிவுரை
05.01.1953-இல் இராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (பார்ப்பன இளைஞர்களால் நடத்தப்பட்ட அமைப்பு) பெரியார் ஆற்றிய உரை, பார்ப்பன எதிர்ப்பு எத்தகையது என்பதைத் தெளிவாக விளக்கும் ஒன்றாகும். "பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம், நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பது தான். இது பிராமணர்களை வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ, அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை" என்று அந்தக் கூட்டத்திற்காக மட்டுமல்ல; தன் வாழ்நாள் இறுதி வரைக்கும் வன்முறையின் பக்கம் இந்த இயக்கத்தை நடத்திடாமல், இன்றைக்கும் அறவழிப் போராட்ட இயக்கமாகவே இதனை நடத்தி வருவதற்கும் வழிகோலியவர் தந்தை பெரியார்.

அவரை வன்முறையாளர் என்றும், இன்னும் அதிகப்படியான வார்த்தைகளால் இனப்படுகொலையை முன்மொழிந்தவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவதும், இழிவு செய்வதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்டனத்திற்குரியவையாகும்.
எந்த பேதமும் இல்லாமல் மனித குலம் வாழவேண்டும் என்பதே அவரது தத்துவம், நோக்கம், செயல்பாடுகள் அத்தனைக்கும் அடிப்படை. பார்ப்பனப் பெண்களின் விடுதலைக்குத் தந்தை பெரியாரின் பங்களிப்பு உண்டே! தந்தை பெரியார் இல்லையேல் பெண்ணடிமைத் தனம் இந்த நாட்டில் நீங்கியிருக்க வழி உண்டா? தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் மட்டுமானது அல்லவே! அவருடைய கருத்துகள்தானே பார்ப்பனர் சமூகத்திலும் புரட்சியை உண்டாக்கின. விதவை என்று கூறி, மொட்டையடிக்கப்பட்டு, முக்காடிட்டு மூலையில் அமர்த்தப்பட்ட கொடுமைகள் எல்லாம் மறைந்து, பார்ப்பன மகளிரும் தங்கள் சுயமரியாதையைப் பெறுவதற்குத் தந்தை பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும், செயல்பாடும்தானே காரணம்!

வர்ணாசிரம, ஜாதி, பாலின அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கும், பாகுபாடுகளுக்கும், அனைத்துத் துறையிலும் இதே நிலை கோலோச்சி வந்ததற்கும் எதிராகப் போராடிய தந்தை பெரியார், அப்படி ஆதிக்கம் செலுத்தியவர்களையும் திருத்தி, சமத்துவ நிலைக்குக் கொண்டு வரவிரும்பி உழைத்தவரே அல்லாமல், அவர்களை அழிக்க நினைத்தவர் அல்லர்.
பெரியார்மீதான அவதூறுகளையும், அவரை வன்முறையாளராகச் சித்தரிக்கும் போக்கையும் தொடர்ந்து ஒரு சிலர் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். பலமுறை அவை பொய்கள் என்பது நிரூபிக்கப்பட்டும், உண்மை நிலையை உணர்ந்தும்கூட தொடர்ந்து இதனைப் பரப்புவது கயமையானதாகும்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பேசியுள்ள இருவருக்கு ஆதரவாக அரிகதா நடத்தும் துஷ்யத்து சிறீதர், விஷாகாஅரி, சித்ரவீணாரவிகிரண் உள்ளிட்ட இன்னும் சிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பெரியார் என்பவர் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத்தலைவராக உயர்ந்து நிற்பதைச் சகிக்க முடியாத வெறுப்புணர்ச்சிதான் இத்தகைய நிலைப்பாடுகளுக்கும், அவதூறுகளுக்கும் காரணமாகும்.

சம்பந்தப்பட்ட மியூசிக் அகாடமி அமைப்பின் தலைவர் திரு.முரளி அவர்கள் இசைக் கலைஞர்கள் ரஞ்சனி - காயத்ரி ஆகியோருக்கு எழுதிய பதிலில், தனக்கு எழுதப்பட்ட கடிதம் பொதுவெளியில் பகிரப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகித்துள்ளார். மேலும், விருதுக்கான தங்கள் தேர்வில் உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் அரியக்குடி, ராமானுஜ அய்யங்காரின் எதிர்ப்பும், 'குடிஅரசு' இதழில் கலைஞர் எழுதிய 'தீட்டாயிடுத்து' என்ற கட்டுரையும் 1946-ஆம் ஆண்டு 'குடிஅரசு' ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 'தீட்டாயிடுத்து' என்னும் தலைப்பில் எழுதிய துணைத் தலையங்கத்தை (09.02.1946) இந்தச் சூழலில் நினைவூட்டுவது பொருத்த மாகும்.
திருவையாறு தியாகராயர் உற்சவத்தில் (கர்நாடக இசை மேடையில்) தமிழரான தண்டபாணி தேசிகர், 'சித்தி விநாயகனே' என்று தமிழ்ப் பாட்டு பாடியதற்காக, "தமிழில் பாடி, சந்நிதானத்தைத் தண்டபாணி தேசிகர் தீட்டுப்படுத்தி விட்டார்; நான் அதே மேடையில் பாட மாட்டேன்" என்று அரியக்குடி இராமானுஜ அய்யங்கார்கள் அரற்றியது 1946-ஆம் ஆண்டோடு முடிந்துபோகவில்லை; அதே நிலை தான் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்கிறது என்பதற்கு இப்போது சங்கீத கலாநிதி விருது பெறவுள்ள நண்பர் டி.எம்.கிருஷ்ணா தலைமையேற்கும் நிகழ்ச்சியில் "பாட மாட்டோம்" என்று பாடகிகள் இருவர் தெரிவித்திருக்கும் எதிர்ப்பே சான்றாகும்.

போராட்டம் இரண்டு தத்துவங்களுக்கிடையில்! அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும், அனைவரும் சமம், அனைவருக்கும் உரிமை வேண்டும், மொழி, இன பேதம் கூடாது என்று கருதும் சமத்துவத்திற்கு எதிராக, எதிலும் மேல்-கீழ் இருக்க வேண்டும். எதுவும், யாரும் சமமில்லை, தமிழ் நீச பாஷை, தமிழர்களின் கலையுடன் கர்நாடக இசை கலக்கக் கூடாது என்று கருதும் போக்குக்கும் நடக்கும் போராட் டமே இது! தன்னுடைய தளத்தில் நின்று, தான் கற்ற கலையை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும், அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து, இசைந்து செயல்படுத்திவரும் டி.எம்.கிருஷ்ணாவின் செயல்களே - இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை, மேற்சொன்ன இருவரின் எதிர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

முற்போக்குக் கருத்துக்களை முன் வைத்துப் பாடினால், அது அவதூறா - இழுக்கா?
கர்நாடக இசைக்கு அவர் சேதம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இசையில் ஆன்மீகத்துக்கு டி.எம்.கிருஷ்ணா இழுக்கு ஏற்படுத்தி விட்டதாகவும். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பதை வெட்கப்படத்தக்கதாகக் கருதும் அளவுக்கு அவரது செயல்கள் ஆக்கியுள்ளன என்றெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அவர்கள் இன்னார் என்பதை அடையாளம் காட்டுகிறது.

கலை அனைவருக்கும் பொதுவானதே!
கலை அனைவருக்குமானது, கலையில் மக்களின் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்ற கருத்தைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. டி.எம்.கிருஷ்ணா எங்கு பிறந்தார் என்பது முக்கியமில்லை; அவர் எதை முன்னிறுத்துகிறார் என்பதே முக்கியம். சமத்துவத்திற்கான குரல் எங்கிருந்து வந்தாலும், அதைக் கரம் நீட்டி வரவேற்க வேண்டியது நமது கடமை! டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக, ஏராளமான பார்ப்பன நண்பர்களும் குரல் கொடுத்திருப்பதும், கலை அமைப்புகள் ஆதரவாக நிற்பதும் வரவேற்கத்தக்கனவாகும்.

அவசியமற்ற இந்த சர்ச்சை எழுந்த பின்னாலும், விருது தேர்விலும், தங்கள் நிலைப்பாட்டிலும் மிக உறுதியாக நிற்கும் மியூசிக் அகாடமி அமைப்புக்கும், அதன் தலைவர் திரு.முரளிக்கும் நமது பாராட்டுகள் வாழ்த்துகள்! நண்பர் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல சிறப்புகளைப் பெற்றவர் என்றாலும், அவரது சமூகக் கருத்துகளுக்காகவே அவர் எதிர்க்கப்படுகிறார் என்றால் அவரை ஆதரிக்க வேண்டியதும் நமது கடமை! அதே வேளையில், அவருடைய கருத்துகளுக்கு எதிராகப் பேசுகிறோம் என்ற பெயரில் வன்மத்தைக் கக்கும் அனைவரின் சிந்தனையும் இன்னும் வர்ணாசிரமத்தில் இருந்து மீளவில்லை என்பதும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பெரியார்மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் சந்திக்க நேரும்.
இசைத்துறையைச் சார்ந்த இரண்டு பெண்களை முன்னிறுத்தி, இந்தச் சூழலில் இதைப் பொதுத்தளத்தில் விவாதிக்கச் செய்து, இதன் பின்னணியில் இருந்து இயங்குவோரையும் தந்தை பெரியார்மீது அவர்கள் அவதூறு பரப்புவதையும், அவரை இழிவு செய்வதையும் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது! இப்படி பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை அவர்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதி! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+