மகளிர் உரிமைத் தொகை ரூ 5000 அக்கவுன்ட்டில் வரவில்லையா? உடனே இதை செய்யுங்க!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ 5 ஆயிரம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது இதுவரை மாதாமாதம் ரூ 1000 பெற்று வந்த பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்றால் மட்டும் இதை செய்யலாம்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் ரூ 1000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று காலை 6.30 மணிக்கு மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு ரூ 5000 வந்ததை பார்த்ததும் என்ன ஏது என தெரியாமல் விழித்தனர். பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் விளக்கியதை பார்த்து பயனாளிகள் மகிழ்ந்தனர்.
இந்த பெரிய தொகை குழந்தைகள் கல்வி கற்க, வீட்டின் பலசரக்கு சாமான் வாங்க உதவும் என ஆரவாரம் தெரிவித்தனர். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு தலா 5000 வீதம் ரூ 6550 கோடி ஒரே நாளில் 5 மணி நேரத்தில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. ஒரு வேளை மாதாமாதம் ரூ 1000 பெற்று வரும் பயனாளிகளுக்கு ரூ 5000 கிடைக்கவில்லை என்றால் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம். இல்லாவிட்டால் cmhelpline.tnega.org என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications