அல்வா மாதிரி ரூ.1000.. மகளிர் உரிமைத் தொகை வரலைனாலும் கவலை வேண்டாம்! மீண்டும் விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல்: தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நிதியை விடுவிக்கிறார். இந்த நிலையில் 29 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், அதிலும் தகுதி இருந்தும் கிடைக்கவில்லை என்றால், கோட்டாட்சியரிடம் மீண்டும் விண்ணப்பித்து திட்டத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
2023 செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. கடந்த 27 மாதங்களாக இந்த தொகை தொடர்ந்து பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
தொடக்கத்தில் விண்ணப்பித்தவர்களில் பலரின் மனுக்கள் பல விதிமுறைகளின் காரணமாக நிராகரிக்கப்பட்டதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்தன. இதற்குப் பிறகு அரசு தகுதி வாய்ந்த புதிய பெண்களையும், விடுபட்டவர்களையும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டது.

உங்களுடன் ஸ்டாலின்
இதற்காக, "உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்பு முகாம் மூலம் புதிய மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த முகாம்களில் மாநிலம் முழுவதும் பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்தனர். இதன் அடிப்படையில் 29 லட்சம் புதிய விண்ணப்பங்கள் அரசிடம் வந்துள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிய பயனாளர்களுக்கு டிசம்பர் 15 முதல் தொகை வழங்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது டிசம்பர் 12ஆம் தேதி முதலே வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
சிவகாசியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசிய உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 1.14 கோடி மகளிருக்கு மாநிலம் முழுவதும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. புதிய பயனாளர்கள் சேர்க்கப்பட்டதுடன், இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும். இந்த திட்டம் தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு முக்கியமான ஆதரவாக மாறியுள்ளது." என்றார். இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சக்கரபாணி
இந்நிலையில் முக்கியமான அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " மகளிர் உரிமைத் தொகை கேட்டு 29 லட்சம் புதிய மனுக்கள் வந்துள்ளன. டிசம்பர் 12 அன்று முதலமைச்சர் உரிமைத் தொகை வழங்கும் தொடங்கி வைக்கிறார். தகுதி இருந்தும் சிலருக்கு தொகை வராமல் இருக்கலாம். அத்தகையவர்கள் தங்கள் மாவட்ட கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தால் மீண்டும் ஆய்வு செய்து திட்டத்தில் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப நிலை
அதாவது, தகுதி வாய்ந்தோர் யாரும் திட்டத்திலிருந்து விலக்கப்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், டிசம்பர் 12க்கு பிறகு பயனாளர்கள் கணக்கில் தொகை வராவிட்டால், அவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து மீண்டும் சேர முடியும். டிசம்பர் 12 முதல் பழைய மற்றும் புதிய பயனாளர்களுக்கு தொகை வரவுள்ள நிலையில், இந்த திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1.40 கோடியை எட்டும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications