மகளிர் உரிமைத் தொகை.. ஆண்டுக்கு ரூ.12000.. எப்படி சேமிக்கலாம்? என்ன செய்யக்கூடாது.. அரசு கைடு
சென்னை: மகளிர் உதவி தொகை பணத்தை எப்படி சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிருக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளான இன்று இந்த திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மாதம் ரூ.1000 என பெண்களுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.12,000 இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளது. இந்த விழாவுக்கு வருகை தந்திருந்த பெண்களுக்கு அரசு சார்பில் கையேடுகள் வழங்கப்பட்டது.

அதில் மகளிர் உரிமைத் தொகையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி. எந்தெந்த சேமிப்புத் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். ஏடிஎம் பின் முதலியனவற்றை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. தொடர் சேமிப்பு திட்டம், நிலையான வைப்பு திட்டம், பொன்மகன், செல்வ மகள் சேமிப்பு திட்டம் போன்றவை உள்ளதால் பெண்கள் அந்த உரிமைதொகையை மாதம் தோறும் அதில் போட்டு சேர்த்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு பணம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது.செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 8 சதவீத வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.தொடர் வைப்புத்தொகைக்கு 2.75% முதல் 7.50% வரை வங்கிகள் வட்டி வழங்குகிறது.நிலையான வைப்பு திட்டத்திற்கு 9.5% வட்டி வழங்கப்படுகிறது.
மேலும் அதில் திட்டத்தின் இரண்டு நோக்கங்கள் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமை திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.
அடுத்தது ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் பின்/ ஓடிபி எண்ணை யாருடனும் பகிர வேண்டாம். ஏடிஎம் அட்டை விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம். ஏடிஎம் இல் அந்நியர் உதவியை நாட வேண்டாம். தொலைபேசி அழைப்புகளில் வங்கி விவரங்களை தெரிவிக்கவேண்டாம் என அந்த கையேடுகளில் விளக்கப்பட்டுள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications