Kalakshetra: கலாஷேத்ரா பாலியல் புகார் - களமிறங்கிய சீமான்- ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தல்
சென்னை: சென்னை கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் தொடர்புடைய ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரியில் பாலியல் புகார்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.

கலாஷேத்ரா ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை கல்லூரி நிர்வாகம் நிராகரித்து வந்தது. இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனாலும் இந்த பிரச்சனை ஓயவில்லை. கலாஷேத்ரா மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் இன்று விசிக எஸ்.எஸ். பாலாஜி, தவாக தி. வேல்முருகன், காங்கிரஸ் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்திரா பவுன்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து "பாலியல் தொல்லை" என டுவிட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதியது. இது தொடர்பாக, கலாஷேத்திரா பவுன்டேஷன் இயக்குநர், நமது மாநில காவல் துறைத் தலைவரைச் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே "நாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்" என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக் கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள்.
பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்திராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள். இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிருவாகத்தினருடன் பேசி வருகிறார்கள். மேலும், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என விளக்கம் அளித்தார்.
காலாஷேத்ரா பாலியல் புகாரில் தொடர்புடைய ஆசிரியர்களை கைது செய்ய வலியுற்த்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுமைக்கு எதிராக மாணவிகள் வீதியில் இறங்கி போராடியும், தொடர்புடைய ஆசிரியர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல் ஒருதலைச்சார்பாக நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளும், தேசிய மகளிர் ஆணையமும் புகாரளிப்பதும் பின் அதனைத் திரும்பப்பெற்றுக் கொள்வதுமான தொடர் நிகழ்வுகள், குற்றவாளிகளைப் பாதுகாக்க திரைமறைவில் கல்லூரி நிர்வாகம் அதிகார அச்சுறுத்தலின் மூலம் மிகப்பெரிய அழுத்தம் அளிப்பதையே உறுதிப்படுத்துகிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்குத் துணைபோகாமல், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நிரந்தரப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களை விரைந்து கைது செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அநீதிக்கு எதிராகப் போராடும் மாணவிகளின் அறப்போராட்டம் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications