வசமாக சிக்கும் தவெக எம்எல்ஏ? “பெண் ஆட்சியர் புகாரை வாபஸ் வாங்கினாலும்.. சட்டம் விடாது!” - இன்பதுரை
சென்னை: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியாக.. தவெக எம்எல்ஏக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட ஆட்சியரே புகாரை வாபஸ் பெற்றாலும் கூட.. சட்டம் சும்மா விடாது என்று அதிமுக எம்பி இன்பதுரை எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கில் சட்டம் தெளிவாக உள்ளது! BNS 75(1)(iv), 75(3)-ன் கீழ் பாலியல் சாயலுடைய கருத்துகளைத் தெரிவிப்பது பாலியல் துன்புறுத்தல் குற்றம். BNSS 359-ன் கீழ் இக்குற்றத்தைச் சமரசம் செய்ய முடியாது.

பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரே விரும்பினாலும், தலைமைச் செயலாளரிடம் அவர் அளித்துள்ளதாகக் கூறப்படும் புகாரைத் திரும்பப் பெற்றாலும், குற்றவியல் வழக்கு முடிவுக்கு வந்துவிடாது. சட்டம் என்பது தனிநபரின் விருப்பத்திற்கு உட்பட்டதல்ல!" என்று பதிவிட்டிருக்கிறார்.
ஆபாச குறுஞ்செய்தி குற்றச்சாட்டு
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மது போதையில் அவரது வீட்டிற்கே சென்று பிரச்சனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவம் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தவெக எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த இடதுசாரிகளும் வலியுறுத்தியுள்ளன. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இப்படி இருக்கையில் இந்த விஷயத்தில், சட்டம் மிக வலுவாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவரே புகாரை வாபஸ் பெற்றாலும் கூட.. வழக்கு முடியாது என்றும் அதிமுக எம்பி இன்பதுரை கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
ஆட்சி அமைத்து 6 மாதம்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் இதுபோன்ற பிரச்சனைகள் கிளம்பியிருப்பதை தவெக தலைமை, குறிப்பாக முதலமைச்சர் விஜய் கொஞ்சம் கூட விரும்பவில்லை. இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications
